இந்தியர்கள் என்றாலே இளிச்சவாயர்கள், ஏமாளிகள், எதைச் சொன்னாலும் நம்புபவர்கள், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற தவறான அபிப்பிராயம் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அகில உலக அளவில் நிலவி வருவதை மனதார நம்மால் மறுக்க இயலாத சூழ்நிலையே நிலவிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் அரசியல் சட்டங்களும் பிற சட்டங்களும் அரசுக் கட்டிலில் தகுதியற்றவர்கள் வந்து அமர்ந்து கோலோச்சும் அவலமுமே ஆகும். ஐம்பத்தாறு தேசங்களாகவும் அனேக குறுநிலப் பகுதிகளாகவும் சிதறுண்டு பற்பல மன்னர் குலத்தவர்களால் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யப்பட்ட நம் நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய நாட்டவர்களான முகலாயர்களும், பின் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நம் செல்வங்களைக் கொள்ளையிட்டதற்கு முக்கியமான காரணம் நம் நாட்டைத் தொன்று தொட்டு ஆண்ட மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் ஒற்றுமையில்லா நிலை நிலவியதேயாகும்.
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான சுதந்திரத்தை, அண்ணல் காந்தி முதலிய அரும்பெரும் தலைவர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் இழந்தும், தங்கள் இன்னுயிரை ஈந்தும் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று உள்நாட்டுக் கொள்ளையர்கள் மீண்டும் அந்நிய நாட்டவர்க்கே தவனை முறையில் விற்று வயிறு வளர்க்கின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு மூல காரணம் பொருளாதார மேதையென்று பன்னாட்டு நிறுவனப் பெருமுதலாளிகளால் பாராட்டப் பெறும் மன்மோகன் சிங்க் எனும் தாடி வளர்த்துத் தலைப்பாகையினுள் தன் சொட்டைத் தலையை மூடி மறைத்து, சோடாபுட்டிக் கண்ணாடியினுன் தன் பூனைக் கண்களை மூடி ஒன்றுமறியாத சிறுபிள்ளை போல் விழித்து நல்லவர் வேஷம் போடும் நபரால் அமுல்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் பொய்யான கொள்கையே ஆகும்.
அக்கொள்கையின் பயன்களைத் தம் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்றவகையிலேயே நம் நாட்டின் பல மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இன்று நாட்டின் செல்வங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் குடும்பத்தவராலும், பெருமுதலாளிகளாலும், பல்வேறு அதிகாரிகளாலும் சூறையாடப் பட்டு மக்கள் தலைகள் மொட்டையடிக்கப் பட்டு அவர்கள் கஞ்சிக்கும், கல்விக்கும், மருத்துவ உதவிகளுக்கும் கையேந்திப் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
நம் நாட்டின் அரசியல் சட்டங்களும் மக்கள் நலச் சட்டங்களும் மிகவும் பலவீனமாக உள்ள்தால் இத்தகைய சுயநலவாதிகள் பெரும் குற்றங்களைப் புரிந்தாலும் உரிய தண்டனை பெறாமல் எளிதில் தப்பிவிடுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் சட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும். மக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிறரும் ஏமாற்றும் வழிகள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். சாலைகளின் குறுக்கே வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி நடுவே பெரும் செலவில் அலங்கார மேடையமைத்து மக்களின் நலத்தைப் பேணுவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர்கள் தாங்கள் என வாய்கிழியப் பேசி, தங்கள் வாக்கு வங்கிகளைப் பெருக்கி ஆட்சியைப் பிடித்து நாட்டைக் கொள்ளையிடும் கண்கட்டு வித்தை நடவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் இத்தகைய ஏமாற்றுக் காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.