இயல் இசை நாடகம் உட்படப் பல கலைகளிலும் தலைசிறந்து விளங்கிய மாமேதைகள் பலர் தோன்றி வாழ்ந்த, வாழ்கின்ற பாரத நாட்டில் பிறந்து வாழும் நாம் அனைவரும் மிகவும் பாக்கியம் செய்தவர்களாவோம். அத்தகைய மாமேதைகளிடையே யார் அதிகத் திறம் வாய்ந்தவர் என்பதைப் பல சமயங்களில் மற்றவர் அறிய முற்பட்டதுண்டு. ஒரு முறை தேவலோகத்தில் இந்திரன் சபையில் நடனமணிகளான ரம்பை, ஊர்வசி இருவரிடையே இத்தகைய ஒரு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. தீர்ப்புச் சொல்ல வல்லவர் யார் என வினவுகையில் உஜ்ஜயினி மாநகரை ஆண்டுவந்த விக்கிரமாதித்த மகாராஜனே என்று அறிந்து அவனை சகல மரியாதையுடன் இந்திரலோகத்துக்கு அழைத்து வந்து நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தினான் தேவேந்திரன்.
இரு மலர்ச்செண்டுகளைத் தயாரித்த விக்கிரமாதித்தன் ரம்பை, ஊர்வசி இருவரிடமும் அம்மலர்ச்செண்டுகள் ஒவ்வொன்றைக் கொடுத்து அதனைக் கையில் பிடித்தவாறே நடனமாடப் பணித்தான். ரம்பை தன் மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக் கொண்டு ஆடினாள். ஊர்வசியோ மலர்ச்செண்டை சற்றே இறுகப் பிடிக்கவும் அதனுள் முன்னரே விக்கிரமாதித்தன் வைத்திருந்த வண்டுகள் அவளது கையைக் கடிக்க, நடனத்தில் தாளம் தப்பியது. நடனத்தில் சிறந்தவள் ரம்பையே என்று தீர்ப்பளித்தான்.
தேவலோக நடனமணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு நாட்டியத்தில் அபாரமான திறமை கொண்டு விளங்கிய நாட்டியப் பேரொளி பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு ஆடிய காட்சி ஒன்று காதல் மன்னன் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றது.
தமிழிசையிலும் கர்நாடக இசையிலும் உலகப் புகழ் பெற்ற இரு மாமேதைகள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் என்பது பிரசித்தி. இவர்களுக்கிடையே என்றேனும் போட்டி அரங்கேறியதா எனத் தெரியவில்லையாயினும். அருணாசலக் கவிராயரின் யாரோ இவர் யாரோ எனும் பாடலை இருவரும் தனித் தனியே பாடியுள்ளனர். அப்பாடல்களைக் கேட்டு மனம் மயங்கி இரண்டில் எது அதிக இனிமையுடையதெனத் தீர்மானிக்க முடியாமல் தவித்தவர் பலருண்டு. அத்தவிப்பை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். அதே தவிப்பை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க நீங்களும் அடைய வேண்டும் எனும் ஆவலில் இதோ:
இயற்றியவர்: அருணாசலக் கவிராயர்
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக