செவ்வாய், 22 டிசம்பர், 2015

அன்புள்ள இளைய சமுதாயமே ...

உன்னோடு பேச வெகுநாளாக ஆசை..

உன்னைப் பார்க்கிறேன்..முகநூலில்.
டிஜிடர் பேனர்களில்..திரையரங்கின் உள்ளே ஆடும் போதும்.. அடிக்கடி.

காலையில் சாணத்தை  குப்பையில் அள்ளிப் போட்டக் கைகளோடு பழைய சோற்றைத் தின்று ...சாண நாற்றம் போகாத சங்கடம் கண்டதுண்டா..?

நெல்லுப் பிணையின் பின்னே நாள் முழுக்கச் சுற்றியதால் ...இரவு கால் குடைச்சலுக்கு மண்ணெண்ணெய் தடவி உள்ளாயா ...?

சட்டையின் கிழிசலை மறைக்க அம்மா மஞ்சள் கயிற்றில் தொங்கும் ஊக்கு கேட்டு நின்றதுண்டா..?

மத்தியானச் சத்துணவை பரிமாறுவது நண்பனாக இருந்து... கரண்டியை அழுத்தியெடுத்து அதிகமாக போட மாட்டானா என்று ஏங்கியதுண்டா...?

எட்டாம் வகுப்பு வரையிலும் செருப்பையேக் காணாத கால்களைத் தெரியுமா...?

தீபாவளி பொங்கலுக்கு புத்தாடை என்பது முதல்நாள் வரை முடிவாகாமல் ..கடன் கொடுக்கும் கடையைத் தேடிய அப்பாக்களை அறிவாயா..?

இருந்ததை பிள்ளைகளுக்கு கொடுத்துவிட்டு.. எஞ்சியிருந்த பருக்கைகளை  கையால்  கரைத்து தண்ணீரால் வயிற்றை நிரப்பிய
அம்மாக்களை அறிவாயா..?

இதுவெல்லாம் சமூகத்தின் ஒரு அடுக்கு.

அதன் கீழிருந்த இன்னொரு நிலை..

பள்ளி செல்லும் பிள்ளைகளை வேடிக்கை  பார்த்துக் கொண்டே சென்று... மாலை யில்  அந்தப் பிள்ளைகளின் பின்னேயே மாடுகளை மேய்த்து திரும்பிய தலைமுறையை அறிவாயா ..?

இவைகளைக் கண்டு கடந்தவர்களே ..கவலையோடு உன்னைப் பார்க்கிறோம்.

சினிமா.. வாழ்வின் வலிகளை சொல்ல வேண்டும்.

ஆனால்  போதை ஊசி போடுகிறது.

ஒரு முறை  தீக்குச்சியை உரசி நெருப்பை உயிராக்குதல்  சிரமம்.

நாயகன் காலடி தேய்வில் தீப்பற்றுகிறது..கைகளைத் தட்டுகிறாய்.. கரிந்து போகிறாய்.

உன்னை விடவும் அதிகமாக சினிமா பார்க்கிறோம்..

சேட்டு பணம் போடுகிறான்..

மலையாளி இயக்கி கன்னடன் நடித்து தெலுங்கன் இசையமைத்த படம்...
தமிழன் பால் வாங்கிப் போகிறான் கட்அவுட்டுக்கு அபிசேகம் செய்ய..!

மொழிவெறி ஏற்றவில்லை. கலைகள்  மொழிகளைக் கடந்தது.

உன் தாய்மொழி மட்டும் ஏன் கல்லுடைக்கப் போகிறது..?

வரலாற்றைப் படி ..வாழ்க்கையைத் தேடு.

தமிழினம் என்பது அடிமையாகக்  கிடப்பதை பெருமையாக நினைப்பது...

மிதிக்கும் கால்களைத் துதிக்காதே..

மண் கற்பழிக்கப்படுகிறது.

நீர்வளம் களவாடப்படுகிறது.

உனக்கான சவக்குழியை உன்னைக் கொண்டே வெட்டுகிறார்கள்.

திரையரங்கிலிருந்து வெளியே வா.

நூலகம் போ..

சாக்கடையின் நடுவில் எப்படி சாப்பிட முடியும்..?

கண்ணைத் திற. உன்னை உணர்.

கடலுக்கு அப்பால் இனமழித்த  இரத்தச் சகதியைப் பார்.

போராளியாக வேண்டாம்.

பெற்றவர்க்கு பிள்ளையாயிரு.

உனக்காக ...வெட்கத்துடன் அவமானத்துடன் நடிகனின் படங்களை பதிவிறக்கம் செய்தேன்.

அவன் சம்பளம் இத்தனைக் கோடியென்று எத்தனைக் காலம் பேசுவாய் தெருக்கோடியில் நின்று..?

எதிர்காலம் உங்களுக்கானது...

எழுந்து வா..திருந்தி வா..

1 கருத்து:

  1. அக்கறையுள்ள பதிவு.

    மிகவும் ஆழமாகவும் உணர்வு பூர்வமாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

    "சேட்டு பணம் போடுகிறான்..

    மலையாளி இயக்கி கன்னடன் நடித்து தெலுங்கன் இசையமைத்த படம்..."
    இந்த வரிகளைத் தவிர்த்திருக்க வேண்டும்.

    தமிழன் அதிக வட்டி வாங்கி,இயக்கி, நடித்து,இசையமைத்த படங்களின் கட்டவுட்டுகளுக்கு அபிசேகம் செய்தால் ஏற்றுக் கொண்டு விடுவீர்களா?

    பொறுப்பான பதிவு எழுதிக்கொண்டு வந்தவரை வழியில் இனமான வண்டு கடித்து விட்டது பெரிய வருத்தம்!

    பதிலளிநீக்கு