திங்கள், 12 டிசம்பர், 2011

இந்தியர்கள் என்றாலே??????

இந்தியர்கள் என்றாலே இளிச்சவாயர்கள், ஏமாளிகள், எதைச் சொன்னாலும் நம்புபவர்கள், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற தவறான அபிப்பிராயம் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அகில உலக அளவில் நிலவி வருவதை மனதார நம்மால் மறுக்க இயலாத சூழ்நிலையே நிலவிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் அரசியல் சட்டங்களும் பிற சட்டங்களும் அரசுக் கட்டிலில் தகுதியற்றவர்கள் வந்து அமர்ந்து கோலோச்சும் அவலமுமே ஆகும். ஐம்பத்தாறு தேசங்களாகவும் அனேக குறுநிலப் பகுதிகளாகவும் சிதறுண்டு பற்பல மன்னர் குலத்தவர்களால் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யப்பட்ட நம் நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய நாட்டவர்களான முகலாயர்களும், பின் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நம் செல்வங்களைக் கொள்ளையிட்டதற்கு முக்கியமான காரணம் நம் நாட்டைத் தொன்று தொட்டு ஆண்ட மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் ஒற்றுமையில்லா நிலை நிலவியதேயாகும்.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான சுதந்திரத்தை, அண்ணல் காந்தி முதலிய அரும்பெரும் தலைவர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் இழந்தும், தங்கள் இன்னுயிரை ஈந்தும் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று உள்நாட்டுக் கொள்ளையர்கள் மீண்டும் அந்நிய நாட்டவர்க்கே தவனை முறையில் விற்று வயிறு வளர்க்கின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு மூல காரணம் பொருளாதார மேதையென்று பன்னாட்டு நிறுவனப் பெருமுதலாளிகளால் பாராட்டப் பெறும் மன்மோகன் சிங்க் எனும் தாடி வளர்த்துத் தலைப்பாகையினுள் தன் சொட்டைத் தலையை மூடி மறைத்து, சோடாபுட்டிக் கண்ணாடியினுன் தன் பூனைக் கண்களை மூடி ஒன்றுமறியாத சிறுபிள்ளை போல் விழித்து நல்லவர் வேஷம் போடும் நபரால் அமுல்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் பொய்யான கொள்கையே ஆகும்.

அக்கொள்கையின் பயன்களைத் தம் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்றவகையிலேயே நம் நாட்டின் பல மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இன்று நாட்டின் செல்வங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் குடும்பத்தவராலும், பெருமுதலாளிகளாலும், பல்வேறு அதிகாரிகளாலும் சூறையாடப் பட்டு மக்கள் தலைகள் மொட்டையடிக்கப் பட்டு அவர்கள் கஞ்சிக்கும், கல்விக்கும், மருத்துவ உதவிகளுக்கும் கையேந்திப் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

நம் நாட்டின் அரசியல் சட்டங்களும் மக்கள் நலச் சட்டங்களும் மிகவும் பலவீனமாக உள்ள்தால் இத்தகைய சுயநலவாதிகள் பெரும் குற்றங்களைப் புரிந்தாலும் உரிய தண்டனை பெறாமல் எளிதில் தப்பிவிடுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் சட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும். மக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிறரும் ஏமாற்றும் வழிகள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். சாலைகளின் குறுக்கே வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி நடுவே பெரும் செலவில் அலங்கார மேடையமைத்து மக்களின் நலத்தைப் பேணுவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர்கள் தாங்கள் என வாய்கிழியப் பேசி, தங்கள் வாக்கு வங்கிகளைப் பெருக்கி ஆட்சியைப் பிடித்து நாட்டைக் கொள்ளையிடும் கண்கட்டு வித்தை நடவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் இத்தகைய ஏமாற்றுக் காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

இயல் இசை நாடகம்


இயல் இசை நாடகம் உட்படப் பல கலைகளிலும் தலைசிறந்து விளங்கிய மாமேதைகள் பலர் தோன்றி வாழ்ந்த, வாழ்கின்ற பாரத நாட்டில் பிறந்து வாழும் நாம் அனைவரும் மிகவும் பாக்கியம் செய்தவர்களாவோம். அத்தகைய மாமேதைகளிடையே யார் அதிகத் திறம் வாய்ந்தவர் என்பதைப் பல சமயங்களில் மற்றவர் அறிய முற்பட்டதுண்டு. ஒரு முறை தேவலோகத்தில் இந்திரன் சபையில் நடனமணிகளான ரம்பை, ஊர்வசி இருவரிடையே இத்தகைய ஒரு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. தீர்ப்புச் சொல்ல வல்லவர் யார் என வினவுகையில் உஜ்ஜயினி மாநகரை ஆண்டுவந்த விக்கிரமாதித்த மகாராஜனே என்று அறிந்து அவனை சகல மரியாதையுடன் இந்திரலோகத்துக்கு அழைத்து வந்து நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தினான் தேவேந்திரன்.

இரு மலர்ச்செண்டுகளைத் தயாரித்த விக்கிரமாதித்தன் ரம்பை, ஊர்வசி இருவரிடமும் அம்மலர்ச்செண்டுகள் ஒவ்வொன்றைக் கொடுத்து அதனைக் கையில் பிடித்தவாறே நடனமாடப் பணித்தான். ரம்பை தன் மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக் கொண்டு ஆடினாள். ஊர்வசியோ மலர்ச்செண்டை சற்றே இறுகப் பிடிக்கவும் அதனுள் முன்னரே விக்கிரமாதித்தன் வைத்திருந்த வண்டுகள் அவளது கையைக் கடிக்க, நடனத்தில் தாளம் தப்பியது. நடனத்தில் சிறந்தவள் ரம்பையே என்று தீர்ப்பளித்தான்.

தேவலோக நடனமணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு நாட்டியத்தில் அபாரமான திறமை கொண்டு விளங்கிய நாட்டியப் பேரொளி பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு ஆடிய காட்சி ஒன்று காதல் மன்னன் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றது.

தமிழிசையிலும் கர்நாடக இசையிலும் உலகப் புகழ் பெற்ற இரு மாமேதைகள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் என்பது பிரசித்தி. இவர்களுக்கிடையே என்றேனும் போட்டி அரங்கேறியதா எனத் தெரியவில்லையாயினும். அருணாசலக் கவிராயரின் யாரோ இவர் யாரோ எனும் பாடலை இருவரும் தனித் தனியே பாடியுள்ளனர். அப்பாடல்களைக் கேட்டு மனம் மயங்கி இரண்டில் எது அதிக இனிமையுடையதெனத் தீர்மானிக்க முடியாமல் தவித்தவர் பலருண்டு. அத்தவிப்பை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். அதே தவிப்பை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க நீங்களும் அடைய வேண்டும் எனும் ஆவலில் இதோ:


இயற்றியவர்: அருணாசலக் கவிராயர்
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

செவ்வாய், 29 நவம்பர், 2011

மத நல்லிணக்கம்



மத நல்லிணக்கம் என்ற சொல்லைக் கேட்டவுடன் , தங்களுடைய மதத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. உண்மையான மத நல்லிணக்கம் மதங்களை- எல்லா மதங்களையும் – வளர்க்குமேயல்லாமல் எந்த ஒரு மதத்தையும் அழிக்காது.
மத நல்லிணக்கம் என்பது என்ன?
மத நல்லிணக்கம் என்பது  மக்களிடையே  நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது. மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.

மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப் படும் ஒரு சொல் அல்ல. அது ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ ந‌டை முறையில் செய‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌ வேண்டிய‌ விட‌யம்.
மத நல்லிணக்கம் - இதைச் செய்ய‌ வேண்டிய‌ பொறுப்பு எல்லா ம‌னித‌ர்களுக்கும் உள்ள‌து.
மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை. உலகிலே எந்த ஒரு சமுதாயமும், எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்கிற அளவிற்கு பொருளாதார, சமூக, கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாதது.
எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றைப் பாராட்டி, அவற்றை எல்லா மக்களும் பினபற்ற வூக்குவிப்பவன் இந்த உலகத்துக்கு நன்மை செய்பவன் ஆகிறான்.
எனவே உண்மையான  மத நல்லிணக்கம் விரும்புபவன் எந்த மதத்தையும் வெறுக்காமல் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமான கண்ணோட்டத்திலே அணுகுவான்.
எல்லா மதங்களிலும் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும் கருத்துக்கள் உள்ளன.

எல்லா உயிர்களின் மீது அன்பு செலுத்தும் கொள்கையைப் போதித்தவர் புத்தர்.  மக்களின் துன்பங்களைக் கண்டு வருந்தி, மக்களுக்காக பாடுபட்டவர். யாரயுமே வெறுக்கவில்லை. யாரையுமே இகழவோ திட்டவோ இல்லை. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் இயேசு கிறிஸ்து  ” நான் பசியாய் இருந்தேன் , எனக்கு உண்ணக் குடுத்தீர்கள் , நான் தாகமாய் இருந்தேன் எனக்கு குடிக்க குடுத்தீர்கள். மிகவும் சிறியவனாகிய என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு கொடுத்தது எனக்கு கொடுத்தது” என்றார்.  ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றார் இயேசு கிறிஸ்து- இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

இஸ்லாத்திலே வட்டி வாங்கக் கூடாது,  மது அருந்தக் கூடாது,  சூதாடக் கூடாது என்ற கொள்கைகளை சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லீமும் தன்னுடைய சொத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏழைகளுக்கு  தானமாக வழங்க வேண்டும் என இஸலாம் சொல்லுகிறது. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது?ஏன் கடைப்பிடிக்க கூடாது ?
இந்து மதம் ஒரு மனிதன் எப்படிப்பட்ட மன நிலைக்கு வரவேண்டுமென
அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)
சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)
நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )
ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)
க்ஷமீ (பொறுமை உடையவனாய்)
ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )
யோகி (யோக நெறியில் நிற்பவன்)
யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)
த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)
என்பதை சொல்கிறது.  இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

என் மதத்தை மட்டுமே ஆதரிப்பேன், மற்ற மதங்களை வெறுப்பேன் என்று சொல்பவன் மோதலை உருவாக்குபவனாக,  வன்முறையை தன்னை அறியாமலேயே தூண்டுபவனாக, பயங்கர வாதத்தை வூக்குவிப்பனாக அமைந்து விடுகிறான்.
மத நல்லிணக்கத்தை கட்டாயப் படுத்தி உருவாக்க முடியாது. அது மனித  இதயங்களின் அன்பால் உருவாக்கப் பட வேண்டியது. மத நல்லிணக்கத்தை பல நிலைகளில் அனுசரிக்கலாம்.
பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள  மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும்.
அடுத்தவர் கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய் , பிசாசு என்று திட்டி, சமூகங்களுக்கு இடையில் மோதலை உண்டாக்க இரத்த ஆறு ஓட விடுவது இரக்கமற்ற வெறிச் செயலே. எனவே வெறுப்புக் கருத்துக்களை, பகைமை உணர்வை தூண்டும் கருத்துக்களை கை விட வேண்டும.
அதற்கு அடுத்த படியாக பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது நட்பை வளர்க்கும். நல்லிணக்கத்தை உருவாக்கும். பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது சமரசத்தை, நட்பைக் காட்டுவது.
இதற்கும் அடுத்த கட்டம் மனப் பூர்வமாக மரியாதை செய்வது. புத்தரின் அன்பையும், இராமரின் தியாகத்தையும், இயேசுவின் தியாகத்தையும், இஸ்லாத்தின் சமத்துவத்தையும் புரிந்து கொண்டவர்கள், மத இன மொழி, வர்க்க, ஜீவ வேறுபாடுகளை மறந்து தியாகத்துக்காக , நல்ல கொள்கைகளுக்காக அவர்களை மனப் பூர்வமாக வணங்குவார்கள். இது சிந்தனை முதிர்ச்சி அடைந்த மனநிலை உள்ளவர்களால் செய்யப் படக் கூடியதே.

காந்தி பிறந்த தினத்தன்று காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பது போல, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது போல,  சர்ச்சுக்கு சென்று இயேசு கிறிஸ்துவுக்கு மெழுகி வர்த்தி ஏற்றி வைக்கலாம், மசூதிக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்ளலாம், கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றலாம்.
ஒரு இந்து மசூதிக்கு சென்று தொழுதால், இசலாத்தின் மீது வெறுப்பு வராது, மசூதியை இடிக்க மாட்டான். ஒரு முஸ்லீம் புத்த விஹாரத்துக்கு சென்று வந்தால் நல்லிணக்கம் ஏற்படும் , பின்னொரு நாள்  யாராவது  புத்தர் சிலையை உடைப்பதைப் பார்த்தால் அதைத் தடுப்பான்.
மத நல்லிணக்கம் என்பது அவரவர் மதச் சின்னங்களை அணிந்து கொண்டு போது மேடைகளில் கையைக் கோர்த்துக் கொண்டு போஸ் குடுப்பது அல்ல. ஓட்டுக்காக காஞ்சி குடிப்பது போன்ற போலி  மத நல்லிணக்க செயல்களை நம்பி உண்மையான மத நல்லிணக்கத்தை நாம் மறந்து விடக் கூடாது.

புதன், 26 அக்டோபர், 2011

பதினாறு செல்வங்கள்

பதினாறு செல்வங்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

இன்பமாய் வாழும் வழி


மனிதர்களில் பலர், அதிலும் குறிப்பாக இந்தியர்களுள் அதிகப்படியானோர் சர்க்கரை வியாதியால் அவதிப்படுவது மிகவும் பிரசித்தமானதொரு செய்தியாகும். உண்மையில் சர்க்கரை வியாதி என்பது என்ன?

நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு செல்லப்படுகையில் அவற்றுள் நல்ல சத்துக்கள் மட்டும் செல்லுக்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றன. நல்லவையல்லாதவை ரத்தத்திலேயே தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டு சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. நல்ல சர்க்கரைச் சத்தாவது நாம் உண்ணும் உணவில் செரிமானமாகும் பகுதியிலுள்ள சர்க்கரைச் சத்தாகும். நல்லவையல்லாதவை செரிமானமாகாத உணவில் உள்ளனவாகும். இதற்குக் காரணம் நல்ல சர்க்கரைச் சத்துக்கு மட்டும் தேவையான அளவிலேயே இன்சுலின் சுரக்கிறது. நல்லவையல்லாத சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகாரிக்கையில் அது வியாதியாகக் கருதப்படுவதனாலேயே மாத்திரைகளும் இன்சுலின் ஊசி மருந்தும் மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகின்றன.

நாம் உண்ணும் உணவு முழுவதும் செரிமானம் செய்ய எத்தகைய உணவுப் பழக்க வழக்கங்களும் கட்டுப்பாடும் உதவுமோ அவற்றைக் கண்டறிந்து செயல்படுத்தினால் சர்க்கரை வியாதி வராது. ஏற்கெனவே வந்த சர்க்கரை வியாதியும் குணமாகி விடும். இப்பரம ரகசியத்தை நான் அறிந்து கடைபிடித்துப் பலனடைந்த விவரத்தை யாவரும் அறிய விரும்பி எடுத்துரைக்க விழைகிறேன்.

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வரை நான் வாழ்வில் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காமல் நினைத்த நேரத்தில் உணவுண்பதும், கணக்கின்றி காஃபி அருந்துவதும், பகல் இரவு பாராமல் அளவின்றி கணிணியின் முன்னர் அமர்ந்து பணி செய்வதும், அதிகமாகப் புகைபிடிப்பதும், போதிய நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யாமலும் ஒரு முறையற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். அதன் பின்னர் சிக்கன் குனியா நோய் பரவிய சமயம் நானும் அதனால் பாதிக்கப்பட்டு அவதியுற்றேன். பின்னர் ந்டப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். அதன் பின் எனக்கு ஒரு முறை சற்றே மூச்சுத் திணரல் ஏற்பட்டது. இரவில் உறங்க எண்ணிப் படுக்கையில் மூச்சுத் திணரல் அதிகமானதும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொண்டிருப்பது, மொட்டை மாடிக்குச் சென்று உலாவுவது என்று ஒரு அமைதியற்ற நிலையில் தவித்தேன். மருத்துவரை அணுகினேன். அவர் எனக்கு ரத்தப் பரிசோதனை நடத்தச் சொல்லி அதன் படி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அபரிமிதமாக உள்ளதெனக் கண்டறிந்து தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்ளுமாறும், புகைபிடிப்பதைக் குறைத்துக் கொண்டு விரைவில் நிறுத்தி விடுமாறும் அறிவுறுத்தினார். 

இதன் பின்னர் உணவில் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து, புகை பிடிப்பதை மிகவும் குறைத்துக் கொண்டு, தினமும் தவறாமல் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தேன். இருப்பினும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவே இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்தேன். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பிருந்து தமிழகத்தில் தமிழக அரசின் முயற்சியால் பல்வேறு ஆலயங்களிலும் யோகாசனப் பயிற்சி தரப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியால் அமையப் பெற்ற மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்த யோகாசனப் பயிற்சியாளர்களைக் கொண்டு யோகப் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். இப்பயிற்சியினாலும் தினமும் நடைப்பயிற்சி செய்வதாலும் நடப்பதில் இருந்த சிரமம் குறைந்துள்ளது அத்துடன் கண்பார்வையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் காணப்படுகிறது. இரவில் அதிக நேரம் விழித்திருப்பதைத் தவிர்த்து உறக்கம் வந்தவுடன் உறங்கச் சென்று இரவில் நன்கு தூங்கி வருவதால் உடலும் மனதும் முன்பிருந்ததை விடவும் அமைதியாக உள்ளன.

இந்நிலையில் சர்க்கரை வியாதி ஒரு வியாதியே அல்லவென்றும் அதனை மருந்துகள் உட்கொள்ளாமலேயே குணப்படுத்த இயலுமென்றும் தெளிவாக விளக்கும் வீடியோவை யூட்யூப் தளத்தில் கண்டேன்:
அதில் அளிக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்டதால் எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது. அதன் படி அன்றுமுதல் நான் சர்க்கரை வியாதிக்கான மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்தி உணவில் மேலும் அதிக கவனம் செலுத்தினேன். இவ்வாறு மாத்திரைகள் உட்கொள்ளாமல் சுமார் 10 நாட்களுக்குப் பின்னர் ரத்ததிலும் சிறுநீரிலும் உள்ள சர்க்கரை அளவைக் காண வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டேன். அதிலிருந்து சர்க்கரையின் அளவு அதிக அளவில் இல்லாமல் மருத்துவர்களால் வகுக்கப்பட்ட அளவில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது 

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க என் நண்பர்கள் யாவரும் மற்றும் பிற யாவரும் இப்பயிற்சிகளை மேற்கொண்டு பயனடைய வேண்டுமென விரும்புகிறேன்.

வேதாத்திரி மகரிஷி அவர்களே யோகப்பயிற்சிகளைப் பின்வரும் வீடியோக்காட்சிகளில் கற்றுத்தருகிறார்.








-- 

சனி, 2 ஜூலை, 2011

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

தேடிச் சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி மனம்
வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை
கூடிக் கிழப்பருவமெய்திக் கொடுங்கூற்றுக்கிறையெனப்பின் மாயும் பல
வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

என்று சக்தி உபாசகரான மஹாகவி பாரதி காளி தேவியைக் குறித்துப் பாடினார். இப்பாடலில் உரைத்தது போலவே எல்லோரையும் போல் வயிறு வளர்ப்பதற்கென்றே பணிகள் பல செய்து ஜீவிக்காமல், உபயோகமற்ற கதைகளைப் பேசாமல் தான் உரைத்தன யாவும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மொழிகளாக நிலைநிறுத்தி, பிறர் மனம் நோகும்படியான செயல்கள் எதனையும் செய்யாமல் சாதிக்கொடுமையைக் களையப் பாடுபட்டு

பறையருக்குமிங்கு தீயர் புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை

என்று தாழ்த்தப் பட்ட சமுதாயத்தினருக்கு உண்மையான விடுதலையை விரும்பிப் பாடுபட்டு, உண்டுடுத்துறங்கி விழித்து வயோதிகமடைந்து நோய்வாய்ப்பட்டு மடியாமல் இளம் வயதிலேயே தான் மனிதப் பிறவி எடுத்ததன் நோக்கத்தை நிறைவேற்றி விட்டுத் தன் பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார் மஹாகவி.

பாரதியார் பகவத் கீதைக்குத் தான் எழுதிய உரையில் "கீதை ஒரு மோக்ஷ சாஸ்திரம், அது ஒரு அமரத்துவ சாஸ்திரம். மண் மீது மாளாமல் மார்க்கண்டேயன் போல் வாழ்தல் சாத்தியமெனவும் அதற்குரிய மார்க்கத்தை கீதை காட்டுகிறது" என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார். 

"துன்பங்களிலே மனங்கெடாதவனாய் இன்பங்களிலே ஆவலற்றவனாய் பகைத்தலும் விழைத்தலும் இன்றி ஒருவன் இருப்பானேயாகில் அத்தகைய தீரன் சாகாதிருக்ககத் தகுந்தவன்" என்ற பொருள்பட விளங்கும் கீதா ஸ்லோகம் ஒன்றை மேற்கண்ட தன் கருத்துக்கு மேற்கோளாகக் காட்டுகிறார் மஹாகவி.

மார்க்கண்டேயர் ஒரு மகரிஷி. இன்ப துன்பங்களைத் துறந்து இறைவனைச் சரணாகதியடைந்தவர். மேற்கண்ட கீதா ஸ்லோகத்தின் உபதேசப்படி வாழ்பவர். அன்றும், இன்றும், என்றும் 16 வயது இளைஞராகவே வாழும் நிலை அடைந்ததாகக் கருதப்படும் ஒரே மனிதர்.

மனிதப் பிறவியானது உலகவின்பத்தைத் துய்ப்பதற்கெனவே எடுக்கப்பட்டது என நம்பி மேற்கூறிய தத்துவங்கள் எவற்றையும் பற்றிக் கவலை கொள்ளாமல் இருக்கும் வரை இன்பமாய் வாழ வழி தேடுவதே வாழ்க்கையாகக் கொண்டு பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறு இன்ப வாழ்வு வாழ விரும்பி அதற்காகவே பாடுபடும் சாமான்ய மாந்தர்களும் என்றும் 16 வயதினராக இளமை நிலைக்கப் பெற்று வாழ்வதிலுள்ள சுகத்தை எண்ணிப்பார்த்து அத்தகைய இன்ப வாழ்வை அடையக் கனவு காண்பதும் இயற்கையே. 

சனி, 25 ஜூன், 2011

இந்த பூமி பந்தின் துணையோடு சூரியனை 38 வது முறையாக மீண்டும் சுற்றிவர ஆரம்பிக்கும் இந்த நாளில் என்னை வாழ்த்துகின்ற  எனதினிய முகநூல் தோழமைகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். 

செவ்வாய், 21 ஜூன், 2011

27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்


27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்: புகைபடத் தொகுப்பு: ஆன்மீக நண்பர்களுக்காக.


                                                        27 நட்சத்திரங்களுக்குரிய திருத்தலங்கள்

ஆன்மீக நண்பர்களின் நலம் கருதி , ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் உரிய திருத் தலங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இங்கு உள்ள ஸ்தலங்கள் அனைத்தும் , பலப்பல யுகங்கள் வரலாறு கொண்டவை. இடையில் அழிவு ஏற்பட்டாலும், அதன் பிரதி பிம்பங்களாய் தன்னையே புதுப்பித்துக் கொண்டவை.  எத்தனையோ மகான்களும், ரிஷிகளும், தேவர்களும் வழிபட்ட, இன்றளவும் நல்ல ஆன்மீக அதிர்வுகளைக் கொண்டு, தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருள் பாலிப்பவை.

இவையெல்லாவற்றையும் விட முக்கியமான ரகசியம் - இந்த நட்சத்திரங்களுக்குரிய தேவதைகள் , சூட்சும ரீதியாக இங்கே தினமும் ஒரு தடவையாவது தங்களுக்குரிய ஆலயம் சென்று வழிபாடு செய்கின்றன.

மனிதராய் பிறந்த அனைவர்க்கும், அவரவர்  கர்ம வினையே -  லக்கினமாகவும், ஜென்ம நட்சத்திரமாகவும், பன்னிரண்டு வீடுகளில் நவக் கிரகங்கள் அமர்ந்து -  பெற்றெடுக்கும் பெற்றோர்களையும், பிறக்கும் ஊரையும்,  வாழ்க்கை துணையையும் , அவர் வாழ்வில் நடக்கும் முக்கிய சம்பவங்களையும் , வாழ்க்கையையுமே தீர்மானிக்கிறது. நமது பூர்வ ஜென்ம தொடர்புடையஆலயங்களுக்கு, நம்மை அறியாமலே நாம் சென்று வழிபடும்போது,  நமது கர்மக்கணக்கு நேராகிறது. அப்படி நிகழும்போது நம் வாழ்வில் ஏற்படும் பல தடைகளும், தீராத பிரச்னைகளும் தீர்ந்து , மனதளவில் நமக்கு பலமும், மாற்றமும் ஏற்படுகின்றன.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அவரவர்க்குரிய நட்சத்திர தலத்தை  -  உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் தினத்தன்று , ஆத்ம சுத்தியுடன், நம்பிக்கையுடன் வழிபட்டு வாருங்கள். அதன் பிறகு உங்கள் வாழ்வில் நிச்சயம் ஒரு புது வெளிச்சம் பிறக்கும்.உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். 


அஸ்வினி - அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 30 கி.மீ.தூரத்தில் திருத்துறைப் பூண்டி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
பரணி - அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடு துறையிலிருந்து(15 கி.மீ.)நெடுங்காடு வழியாக காரைக்கால் செல்லும் வழியில் நல்லாடை என்னும் ஊரில்  உள்ளது.
கார்த்திகை - அருள்மிகு காத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்:  மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் கஞ்சாநகரம் அமைந்துள்ளது. மெயின் ரோட்டிலிருந்து பிரியும் ரோட்டில் அரை கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம்.
ரோஹிணி -  அருள்மிகு பாண்டவதூதப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: காஞ்சிபுரம் ஏகாம் பரேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள சாலையில் கோயில் அமைந்துள்ளது.
மிருக சீரிஷம் -  அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 50 கி.மீ., தூரத்தில்
முகூந்தனூர் உள்ளது. இந்தஸ்டாப்பில் இருந்து, ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
திருவாதிரை - அருள்மிகு அபய வரதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ளபட்டுக்கோட்டை சென்று, அங்கிருந்து 12 கி.மீ. சென்றால் அதிராம்பட்டினத்தில் உள்ள இந்த ஆலயத்தை அடையலாம்.
புனர் பூசம் - அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : வேலூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் வழியில், 67 கி.மீ., தூரத்தில் வாணியம்பாடி உள்ளது. பஸ்ஸ்டாண் டில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள பழைய
வாணியம் பாடியில் கோயில் உள்ளது.
பூசம் - அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் 30 கி.மீ., சென்றால் விளங்குளம் விலக்கு வரும். அங்கிருந்து தெற்கே 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி வழியாகவும் விளங்குளத்தை அடைய வழியிருக்கிறது. 
ஆயில்யம் - அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: கும்பகோணத்தில் இருந்து சூரியனார் கோவில் செல்லும் ரோட்டில் 11 கி.மீ., தூரத்தில் உள்ள திருவிசநல்லூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். திருவிசநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு
மகம் - அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் ரோட்டில் 12 கி.மீ., தூரத்தில் விராலிப்பட்டி விலக்கு உள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., மினிபஸ்சில் சென்றால் கோயிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
பூரம் - அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 7 கி.மீ., சென்றால் வரும் திருவரங்குளம் என்னும் ஊரில் ஆலயம் உள்ளது.
உத்திரம் - அருள்மிகு மாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டிலிருந்து 22 கி.மீ. தூரத்திலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள இடையாற்று மங்கலம் என்னும் ஊரில் உள்ளது.
ஹஸ்தம் - அருள்மிகு கிருபா கூபாரேச்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலத்திலிருந்து பிரியும் ரோட்டில் 8 கி.மீ. தூரத்தில் கோமல் என்னும் ஊரில் உள்ளது.குத்தாலத்திலிருந்து பஸ், ஆட்டோ வசதி உள்ளது
சித்திரை - அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: மதுரையில் இருந்து 23 கி.மீ., தூரத்திலுள்ள குருவித்துறைக்கு மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலிருந்து பஸ் உள்ளது. குருவித்துறையில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி தினங்களில்  கோயில் வரை பஸ்கள் செல்லும். மற்ற நாட்களில் ஆட்டோவில் செல்ல வேண்டும்.
சுவாதி - அருள்மிகு தாத்திரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை பூந்தமல்லியில் இருந்து தண்டுரை என்ற ஊருக்கு செல்லும் வழியில் 8 கி.மீ., தூரத்தில் சித்துக்காடு என்ற ஊரில் இத்தலம் உள்ளது. குறித்த நேரத்தில் மட்டுமே பஸ் உண்டு என்பதால், பூந்தமல்லியில் இருந்து வாகனங்களில் சென்று திரும்பலாம்
விசாகம் - அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
இருப்பிடம் : மதுரையில் இருந்து 155 கி.மீ., தொலைவிலுள்ள செங்கோட்டை சென்று, அங்கிருந்து 7 கி.மீ., தூரத்திலுள்ள திருமலைக்கோவிலை பஸ் மற்றும் வேன்களில் அடையலாம். இவ்வூரைச் சுற்றி பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவை உள்ளன
அனுஷம் - அருள்மிகு மகாலட்சுமிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கீ.மீ. தூரத்தில் திரு நின்றியூர் என்னும் ஊரில் இத்தலம் அமைந்துள்ளது.
கேட்டை - அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ., தூரத்திலுள்ள பசுபதிகோயில் பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

மூலம் - அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சென்னை கோயம்பேட்டில் இருந்து தக்கோலம் செல்லும் வழியில் 45 கி.மீ., தூரத்தில் மப்பேடு என்ற ஊரில்  உள்ளது. (பூந்தமல்லியிலிருந்து (22 கி.மீ.) பேரம்பாக்கம் செல்லும் வழியில் மப்பேடு உள்ளது.)
பூராடம் -  அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: தஞ்சாவூரில் இருந்து (13 கி.மீ.,) திருவையாறு சென்று, அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் 4 கி.மீ., தூரம் சென்றால் கடுவெளியை அடையலாம். பஸ் ஸ்டாப் அருகிலேயே கோயில் அமைந்துள்ளது.
உத்திராடம் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: சிவகங்கையில் இருந்து காரைக்குடி செல்லும் வழியில் உள்ள (12 கி.மீ.,) ஒக்கூர் சென்று, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ., சென்றால் பூங்குடி என்ற ஊரில் உள்ளது. ஆட்டோ உண்டு. மதுரையில் இருந்து (45 கி.மீ.,) இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை நேரடி பஸ் வசதி உண்டு.
திருவோணம் -  பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில்
இருப்பிடம்: வேலூரிலிருந்து சென்னை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்திலுள்ள
காவேரிப்பாக்கத்தில் இறங்கி, அங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ. சென்றால் திருப்பாற் கடலை அடையலாம். ஆற்காடு, வாலாஜா விலிருந்தும் பேருந்துகள் உள்ளன. இவ்வூரில் இரண்டு பெருமாள் கோயில்கள் இருப்பதால், பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோயில் என கேட்டு செல்லவும்
அவிட்டம் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம் : கும்பகோணம் மகாமகக்குளம் மேற்குக் கரையிலிருந்து 4 கி.மீ. தூரத்தில் கோயில்அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து தாராசுரம், முழையூர் வழியாக மருதாநல்லூர் செல்லும் பஸ்களில் கொருக்கை என்னும் இடத்தில் உள்ளது..
சதயம் -  அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 10 கி.மீ. தொலைவில் திருப்புகலூர் என்னும் ஊரில் உள்ளது.
பூரட்டாதி - அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
இருப்பிடம்: திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக் காட்டுப்பள்ளி சென்று, அங்கிருந்து அகரப் பேட்டை செல்லும் ரோட்டில் 2 கி.மீ. தூரம் சென்றால் ரங்கநாதபுரம் என்னும் ஊரில் உள்ளது.
உத்திரட்டாதி - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில்
இருப்பிடம்: புதுக்கோட்டையில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள ஆவுடையார்கோவில் சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் வழியில் 21 கி.மீ தூரத்தில் தீயத்தூர் உள்ளது.  மதுரையில் இருந்து செல்பவர்கள், அறந்தாங்கி சென்று, அங்கிருந்து திருப்புவனவாசல் செல்லும் பஸ்களில் சென்றால் தீயத்தூர் என்னும் இடத்தில் உள்ளது. தூரம் 120 கி.மீ.
ரேவதி - அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
இருப்பிடம்: திருச்சியிலிருந்து முசிறி (40கி.மீ)சென்று, அங்கிருந்து வேறு பஸ்களில் தாத்தய்யங்கார் பேட்டை(21 கி.மீ) செல்ல வேண்டும். இங்கிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காருகுடி என்னும் இடத்தில் உள்ளது.

உங்களால் முடிந்தவரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சாதாரண தினங்களில் கூட  இந்த ஆலயங்களில் சென்று வழிபட்டு வர , உங்கள் கஷ்டங்கள் வெகுவாக மட்டுப்படும். வாழ்க வளமுடன், நீண்டநாள் நலமுடன்...

என்றும் அன்புடன் சே.பா. சபரிராஜ் M.A.,M.Phil.,

பதிவிற்கு உதவிய முகநூல் நண்பர் கே எம் தர்மா அய்யா அவர்களுக்கு நன்றிகள் பல உரித்தாகுக .
 ·  · Share

வியாழன், 9 ஜூன், 2011

மாம்பழம் சாப்பிட வாங்க 
எங்கள் தோட்டத்து மாம்பழம் 

சந்தையில் கிடைக்கும் மாங்காய்களை
வாங்கி பழுக்க வைத்து சாபிட்டால் நல்லது 

விரைவாக பழுப்பதற்காக விஷ தன்மையுள்ள 
வேதியல் பொருட்கள்  பயன்படுதப் படுகிறது. 




கவனம். நண்பர்களே. 

சனி, 4 ஜூன், 2011



எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்


“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என ஓளவையாரும், “எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் எண்களின் முக்கியத்துவத்தை தங்கள் பாடல்களில் குறித்துக் காட்டியுள்ளனர்.

உலகின் பல மொழிகளுக்கு சொந்தமாக எண்கள் எதுவுமே இருந்ததில்லை. ஆரம்ப காலத்தில் பல மொழிபேசும் மக்கள் எண்களைப் பற்றி தெளிவான கருத்தோட்டம் இல்லாதவர்களாகவே வாழ்ந்துவந்தனர். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள இந்து அராபிய எண்களின் அறிமுகத்துக்குப் பின்னரே எண்கள் பற்றிய மிகத் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட்டன. இந்த இந்து அராபிய எண்களின் தோற்றுவாய் தமிழ்தான் என்பதை தெரிந்துகொள்ளும்போது ஏற்படும் மகிழ்சி மட்டற்றது.

ஆதிகாலம் முதல் தமிழ் மக்களிடையே எண்கள், கணிதம், கால-நேர அவவைகள் பற்றி தெளிவான அறிவு நிரம்பியிருந்தது. சங்கநூல்களில் இந்த எண் அளவைகள் பற்றி பலப் பல குறிப்புகள் காணப்படுகின்றன. கணியன் பூங்குன்றனார், கணக்காயன் தத்தனார், மதுரைக் கணக்காயனார், கணியாதனார் என்ற சங்ககால புலவர்களின் பெயர்களே இவற்றுக்கு சாட்சி எனலாம். தொல்காப்பியம் முதல் அகநானூறு, புறநானூறு என சங்கநூல்களில் எல்லாம் கணிதம் பற்றியும் எண்கள் பற்றியும் ஏராளமான சொற்கள் ஆங்காங்கு விரவிக்கிடக்கின்றன.

திருவள்ளுவர் திருக்குறளில் ஒன்று என 11 இடங்களிலும், இரண்டை 10 இடங்களிலும், நான்கை 11 இடங்களிலும், ஐந்தை 14 இடங்களிலும், ஆறு என்ற எண்ணை ஒரு இடத்திலும், ஏழு என 7 இடங்களிலும், எட்டு, பத்து, ஆயிரம் என்பவற்றை ஒவ்வொரு குறள்களிலும், கோடியை 7 இடங்களிலும், பாதியை (அரை) ஒரு இடத்திலும், காற்பாகம் (கால்) என ஒரு குறளிலும் எழுதியுள்ளார்.

“ஒரூ கை, இரூ கை மாஅல் ! முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!” என பரிபாடலில் (3/ 34-45) தமிழ் எண்கள் 1-10 வரைக்கும் வரிசையாக கூறப்பட்டு தொடர்ந்து 100, 1000, 10000, 100000 என 100000000000000 எனும் எண் (ஆம்பல் - hundred trillion) வரை விபரிக்கப்படுவதை காணலாம். அதே பரிபாடலில்

“ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதேர்
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை” என வரும் பரிபாடலின் (3/ 76-80) அடிகளால் தமிழ் எண்கள் 0, 1/4, ½, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என வரிசைப்பபடுத்திக் காட்டப்படுகின்றன. மேலும் தொண்டு மற்றும் ஒன்பதிற்று எனும் சொற்களும் இலக்கம் ஒன்பதை குறிக்கவே சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டன என்பது புலனாகும்.

இவற்றிலிருந்து கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழ் எண்கள் வழக்கில் இருந்ததை நாம் அறியமுடிகிறது. தற்போது நாம் பூச்சியம் என்று சொல்வதன் திருத்தமான தமிழ் சொல் பாழ் ஆகும். பாழ் என்றால் எதுவுமற்ற வெறுமை என அர்த்தம். பாழ் என்ற தமிழ் சொல்லிலிருந்தே ழகர உச்சரிப்பு இல்லாமையால் பூஜ்யம் என்கின்ற வடமொழி சொல் (பாழ்-அம்… பாழ்ச்-அம்… பூஜ்அம்..)  தோன்றிற்று. என்பர். பாழ் என்பதற்கு தமிழில் சுழி எனவும் வேறொரு சொல் குறிக்கப்படுவதுண்டு. சுழி என்றால் சுழிக்கப்பட்ட வெற்று வளையம் என பொருள்படும். இதிலிருந்தே சூன்யம் என வடமொழி சொல் தோன்றியது என்பர். சூன்யம் என்பதிலிருந்தே அராபியமொழியூடாக ஐரோப்பிய மொழிகளுக்கு “Cyber” என்பதுவும், “Zero” என்பதுவும் தோற்றம் பெற்றன.

தமிழில் ஒன்று என்று அழகாக நாம் உச்சரிக்கும் சொல்தான் இன்றைய ஆங்கிலத்தில் “One” என மாற்றம் பெற்றுள்ளதை நாம் அறிந்துகொள்ளலாம். இது நேரடியாக தமிழிலிருந்து அரபுக்கு சென்று (ஒ-அ-ஹித் uâhid – அரபு மொழி) அங்கிருந்து ஐரோப்பியர்களிடையே நுழைந்தது. இதுபோலவே இரண்டு என்பதும் அரேபியர்கள் ஊடாக (இத்-னாதான்  ithnatân - அரபு மொழி) ஐரோப்பாவை அடைந்து முடிவில் ஆங்கிலத்தில் Two என வடிவம் பெற்றது.

இரண்டு (துளிர்) – துவி (வடமொழி) – Two (ஆங்கிலம்)
மூன்று (திரி) - திரி (வடமொழி) -  – Three (ஆங்கிலம்)
நான்கு (சட்டகம்) -சதுர் /சார் (வடமொழி) – பார் /அர் பார் (அரபுமொழி)– Four (ஆங்கிலம்)
ஐந்து – பஞ்ச (வடமொழி) – Five (ஆங்கிலம்)
ஆறு - ஷஷ்ர (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Six (ஆங்கிலம்)
ஏழு - ஸப்த (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) - Seven (ஆங்கிலம்)
எட்டு  - அட்ட (வடமொழி) - Eight (ஆங்கிலம்)
ஒன்பது (தொண்டு) – நவ (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Nine (ஆங்கிலம்)
பத்து (பல்து / பஃது) – தச (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Ten (ஆங்கிலம்)

தமிழ் எண்கள் பிறமொழிகளில் உச்சரிக்கப்படும் விதத்தை பார்க்கும்போது அவை இரண்டு விதமாக அந்த மொழிகளுக்கு போய்ச் சேர்ந்திருப்பதை நாம் காணலாம். ஒன்று நேரடி தமிழ் உச்சரிப்பு திரிபடைந்து பிறமொழிகளில் அவர்களது உச்சரிப்புக்கு ஏற்ற வகையில் மாற்றமுற்ற வடிவம். மற்றையது எண்களுக்குரிய தமிழ் சொல்லில் அர்த்தத்தை நேரடியாக பிற மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ததன் விளைவாக தோற்றம் பெற்ற எண் பெயர்கள் ஆகும். இவ்வாறான சொற் பிறப்புகள் பொதுவாக அனைத்து மொழிகளிலும் காணப்படுகின்றன.

தமிழிலும், வடமொழியிலும் பல சொற்கள் பொதுவான உச்சரிப்பு, மற்றும் பொருள் விளக்கத்துடன் காணப்படுகின்றன. எந்த மொழியிலிருந்து எந்த சொல், எந்த மொழிக்கு இரவல் பெறப்பட்டது என்பதுவும் அறியமுடியாததொன்றாகவே இருந்துவருகிறது. இது இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்திருந்து அல்லது ஓரே மக்கள் கூட்டத்திலிருந்து தோற்றம் பெற்று இரு வேறு கிளைகளாக வளர்ச்சியுற்றதையே காட்டி நிற்கின்றது எனலாம். எனினும் மொழி அமைப்புகள், மொழி தோற்றுவாய், இனத் தோற்றுவாய் என்பவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த பல அறிஞர்களினதும் கருத்து தமிழே முதலில் தோன்றிய மொழி என்பதாகும். சிந்துவெளி மக்கள் பயன்படுத்தியது தமிழின் தொன்மை வடிவத்தையே எனவும், பின்னாளில் உள் நுழைந்த ஆரியர்கள் கலப்பால் வடமொழி தோற்றம் பெற்றது எனவும் தமிழ் ஆய்வாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.






நன்றி முகநூல் நண்பர் ப்ரிய சிநேகன் 

சனி, 21 மே, 2011

நண்பரின் பிறந்தநாள் வாழ்த்து

அன்பும் பண்பும் பெருகி 
அறிவும் ஆற்றலும் பெற்று 
குன்றாத செல்வமும் 
குலையாத ஆரோக்யமும்
குறைவில்லாத வாழ்வும் பெற்று 
வாழ்வாங்கு வாழ்க நீவிர் !

நண்பரின் பிறந்தநாள் வாழ்த்து 

கொங்கணர்

கொங்கணர் :
போகரின் சிஷ்யர்களுள் வித்தியாசமானவர்கொங்கணர்
கொக்கென்று நினைத்தாயோ... கொங்கணவா?’....திருவள்ளுவரின் மனைவி வாசுகி.

கொங்கண தேசத்தில் பிறந்தவர் என்பதால், கொங்கணர் என்று இவர் அழைக்கப்பட்டார் என்பர். அடிப்படையில் இவர், இரும்புக்கலம் செய்யும் ஆசாரிமார்களின் குடிவழியைச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். ஆசாரிமார்கள், பிரம்மனையும் விஸ்வகர்மாவையும் பிரதான தெய்வங்களாக வழிபடுபவர்கள். இவர்களின் குடும்பங்களில் தனித்தனியே குலதெய்வ வழிபாடுகளும் பிரதானமாக இருக்கும். கொங்கணர் குடும்பத்தில், சக்திவழிபாடு பிரதானமாக இருந்தது. கொங்கணரும் தொடக்கத்தில் அம்பிகை பக்தராகத்தான் திகழ்ந்தார். தாய்_தந்தையர்க்கு உதவியாக கலங்கள் செய்து பிழைப்பைக் கடத்தினார். காலாகாலத்தில் இவருக்குத் திருமணமும் நடந்தது. திருமணத்திற்குப் பிறகுதான், இவர் வாழ்வில் எல்லாமே மாறத் தொடங்கியது. கொங்கணரின் மனைவி, பேராசை மிக்க பெண்மணி. ‘தன் கணவன் கோடிகோடியாக சம்பாதிக்க வேண்டும், பொன்னும் மணியும் தன் வீட்டில் கொட்டிக் கொழிக்க வேண்டும்’ என்று விரும்பினாள்.

அப்படி சம்பாதிக்கத் துப்பில்லாதவர்கள், ஆணாயிருந்தாலும் அவர்கள் பேடிகளே என்பது போல எண்ணினாள். அவளது எண்ணம், கொங்கணரை மிகவும் பாதித்தது. அப்போது அவர் பார்க்க, சித்த புருஷர் ஒருவர் தங்கக்காசுகளை வரவழைத்தும், கைகளை வருடித்தந்து வாசனையை உருவாக்கியும் அற்புதம் செய்தார். கொங்கணர் விழுந்த இடம் இது. அந்த சித்தர் எப்படி அவ்வாறு சாதித்தார் என்று கேட்கப் போக, சித்த புருஷர்கள் மனது வைத்தால் ஒரு மலைகூட சருகாகி விடும் என்றும், அவர்கள் நீரில் நடப்பர், நெருப்பை விழுங்குவர், காற்றில் கரைவர் என்றும் அவர்களது பிரதாபங்கள் கொங்கணருக்கு எடுத்துக் கூறப்பட்டது. இதுவே, கொங்கணர் தானும் ஒரு சித்த யோகி ஆகவேண்டும் என நினைப்பதற்குக் காரணமாகிவிட்டது.

கூடவே, சித்த யோகியானால் இரும்பைத் தங்கமாக்கலாம்; ஆசைப்பட்டதை எல்லாம் வரவழைக்கலாம் என்கிற எண்ணமும் சேர்ந்து கொண்டது. மொத்தத்தில், சித்த மார்க்கம் கொங்கணர் வரையில் மனிதன் கடைத்தேற உதவும் மகாமுக்தி மார்க்கமாக இல்லாமல், உலகின் சக்திகளை ஆட்டிப்படைக்க விரும்பும் ஒரு சக்தி மார்க்கமாகத்தான் தோன்றியது. இவ்வேளையில்தான், போகரின் தரிசனம் கொங்கணருக்குக் கிட்டியது. போகரின் காலில் விழுந்த கொங்கணர், தான் ஒரு தேர்ந்த சித்தனாகிட தனக்கு மந்திர உபதேசம் செய்யுமாறு வேண்டினார்.

‘‘உபதேசம் செய்வது பெரிய விஷயமல்ல...! அதைப் பின்பற்றி தவம் செய்வதில்தான் எல்லாம் இருக்கிறது’’ என்றார், போகர். ‘‘நானும் தவம் செய்வேன் ஸ்வாமி..!’’  ‘‘தவம் புரிவது என்பது, உயிரை வளர்க்கும் செயல் போன்றதன்று. அதற்கு நேர் மாறானது. தான் என்பதே மறந்து, உபதேசம் பெற்ற மந்திர சப்தமாகவே தன்னை ஆக்கிக் கொள்ளும் ஒரு செயல்.’’  ‘‘தங்கள் சித்தப்படியே நான் என்னை மறந்து தவம் செய்வேன் ஸ்வாமி!’’ ‘‘தன்னை மறப்பது அவ்வளவு சுலபமல்ல அப்பனே.... உன் ஜாதகக் கணக்கு அதற்கு இடம் தரவேண்டும். ஏனென்றால், வினைவழி கர்மங்களால்தான், மானுடப் பிறப்பெடுக்கிறோம். அந்தப் பிறப்புக்கென்று எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. நீ விரும்பினாலும் அவை உன்னை மறக்கவிடாது. ஒருவேளை அந்தக் கணக்கை நீ வாழும் நாளில் தீர்க்க இயலாவிட்டால், உன் பிள்ளைகள் அந்தக் கணக்கை நேர் செய்ய வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கணக்கு எப்படிப்பட்டது என்றும் ஒருவருக்கும் தெரியாது. அந்தக் கணக்கு தீராமல் நீ சித்தனாக முடியாது.’’ ‘‘எந்த வகையில் அந்தக் கணக்கை அறிவது? எப்படி அதை நேர்செய்வது?’’ ‘‘தவத்தில் மூழ்கு.... தவம் கலையாமல் தொடர்ந்தால், அந்தக் கணக்குகளில் பாக்கி எதுவும் இல்லை என்று பொருள். தவம் தடைபட்டால், அந்தக் கணக்கு தன்னை நேர்செய்து கொள்ள உன்னை அழைக்கிறது என்று பொருள்.’’

‘‘இப்படித்தான் நாம் உணர முடியுமா? வேறு வழிகள் இல்லையா?’’ ‘‘பஞ்சபூதங்களை ஒன்றாக்கிப் பிசைந்தால் வருவதுதான் இந்த தேகம். அதே பஞ்ச பூதங்களால்தான், பின் இது வளர்ந்து பெரிதாகிறது. மெல்ல மாயை வயப்பட்டு, புலன்களுக்குப் புலப்படுவதை மட்டுமே இருப்பதாகவும், புலனாகாததை இல்லாததாகவும் இது கருத ஆரம்பித்து விடுகிறது. உன் கேள்வியும் கூட அப்படி மாயையில் வீழ்ந்த ஒரு மனிதன் கேட்பது போல்தான் இருக்கிறது.

பல விஷயங்களை இந்த உலகில் நாம் சூட்சுமமாகத்தான் உணர முடியும். பச்சைப் பசேல் என்று ஒரு நிலப்பரப்பு கண்ணில் பட்டால், அங்கே நிலத்தடியில் நீர் வளம் சிறப்பாக இருப்பதாக உணரலாம். மரம் முழுக்க கனிகள் கொழித்துக் கிடந்தால், மரத்தின் ஆணிவேர் பலமாக இருக்கிறது என்று உணரலாம். மரத்துக்குக் கீழே தோண்டிப் பார்த்துதான் அறிய வேண்டும் என்கிற அவசியமில்லை. உன் கர்மக் கணக்கு எப்படி என்று அறியவும், தவம்தான் வழி. தவம் செய்! தவம் ஒன்றுதான் மாயையை வெல்லும் வழி. மாயைக்கும் தவத்துக்கும் நடுவில் நடைபெறும் யுத்தத்தில், எது வலுமிக்கதோ அது வெற்றிபெறும்.

நீ நல்வினைகள் புரிந்திருந்தால், உன் தவம் வலுவானதாக இருக்கும். தீவினைகள் புரிந்திருந்தால், மாயை வலுவானதாக இருக்கும். எது வலுவானது என்பதை, களத்தில் இறங்கிப் பார்த்து தெரிந்துகொள்!’’ என்ற போகரின் உபதேசம், கொங்கணரை தவத்தில் மூழ்க வைத்தது. அந்தத் தவத்தின் பயனாக, அரும்பெரும் சித்தர்கள், முனிவர்களின் தரிசனம் அவருக்குத் தொடர்ச்சியாகக் கிட்டத் தொடங்கியது. போகர் அழுத்தமாகக் கூறியதன் எதிரொலி, தவத்திற்கு இடையூறு வந்த போதெல்லாம் அவரை எச்சரித்து, தவத்தைத் தொடர வைத்தது.

‘‘மாயை என்னை மயக்கப் பார்க்கிறது. நான் மயங்கமாட்டேன்.. மயங்கமாட்டேன்.’’ என்ற கொங்கணர், சிலைபோல அமர்ந்து தவம் புரியலானார். ஆடாமல் அசையாமல் அமர்ந்து தனக்குள் சப்தரூபமாகிய மந்திரத்தை மட்டுமே விளங்க வைக்கும் ஒருவரை கோள்களாலும் எதுவும் செய்யமுடியாது.எனவே, கோள்கள் கொங்கணர் வரையில் செயலிழந்து நின்றன.  அதேசமயம், செயல்பட்டு கொங்கணரைச் சாய்ப்பதற்கு வேறு வழியைத் தேடத் தொடங்கின. அதில் ஒன்று, யாகம் வளர்ப்பது என்பது...!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் நலம்பெற விரும்பினால் அவன் இறையருளையும், சில வரங்களையும் பெற்றிட வேதம் காட்டியுள்ள ஒரு வழிமுறைதான் யாகம், ஹோமம். ஒருவன், ஊருக்குப் பொதுவாய் நலம் வேண்டிச் செய்வது யாகம்; தனக்காக ஒருவன் செய்து கொள்வது ஹோமம். யாகமும் ஹோமமும் குறைவற நிறைவேற்றப்பட்டால், அதைப் புரிந்தவர்களுக்கு அவர்கள் கோரிய பலனை அது அளித்தே தீரும். உலகில் எல்லா நலன்களுடனும் வாழ விரும்புகின்றவர்கள்தான் இவற்றைப்புரிவார்கள். பற்றற்றவர்கள் இதன் பக்கமே வரமாட்டார்கள். யாக பலன்களை வரமாக வாங்கிக் கொண்டு அதை மண்ணில் வாழ்ந்து பயன்படுத்திப் பயன்படுத்தி மகிழும் ஒருவாழ்க்கை, லௌகீக மனிதர்களுக்குச் சரியானதாக இருக்கலாம். துறவிகளுக்கு எதற்கு அது? இருந்தும், சில துறவிகள் யாகம் வளர்த்து வரங்களைப் பெற்ற கதைகளை அறிவோம். அதே சமயம், அப்படிப் பெற்ற வரங்களாலேயே அவர்கள் பாடாய்ப்பட்டதையும் சேர்த்தே அறிவோம்.உதாரணத்திற்குவிசுவாமித்திரர் ஒருவர் போதுமே...!

இப்படி யாகம், ஹோமம் செய்து உரிய பலன்கள் பெறுவதை கொங்கணரும் இடையில் அறிந்து கொண்டபோது, அவரது புத்தி மெல்ல மாறியது. காலமெல்லாம் அமர்ந்து தவம் செய்து பெறும் பயன்களை விட இதில் வேகமாக பயன் பெற்றுவிட வழி இருப்பதாக அறிந்தவர்,  தவத்தை விடுத்து யாகத்துக்கு மாறிவிட்டார். அவரது மாயை அவரை அப்படி எண்ண வைத்து அவரை ஆட்டிவைக்கப் பார்த்தது. இருப்பினும் அவர் செய்த அளவிற்கான தவப்பயன், கௌதம மகரிஷி வடிவில் அவரை நேர்படுத்த முயன்றது. பஞ்ச ரிஷிகளில் கௌதமர் முக்கியமானவர். அவர், கொங்கணர் திசை மாறுவதை உணர்ந்து அவரை எச்சரித்தார். ‘‘ சித்தனாக விரும்பினால், நீ சொல்வதை சித்தம் கேட்க வேண்டும். சித்தம் சொல்வதை நீ கேட்கக் கூடாது. யாகம், ஹோமம் எல்லாம் பெரும்துன்பத்தில் இருப்பவர்கள் அருள்சக்தி பெற்று உய்வடைய பயன்படுத்தும் குறுக்கு வழிமுறைகள். உனக்கு எதற்கு அது? உபதேச மந்திரத்தால் தவம் செய்வதே உன் வரையில் உற்ற செயல்’’ _ என்று கௌதமர் கொங்கணரை ஒருமுறைக்குப் பலமுறை நேர்படுத்தினார்.

நன்றி கே எம் தர்மா ஐயா .