கடந்த 7 மாதங்களாக நீடித்துவரும் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது.
கூடங்குளம் போராட்டக் குழுவை சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன், ராஜலிங்கம், முகிலன் ஆகியோர் ஏற்கெனவே கைது
செய்யப்பட்டுவிட்டனர். போராட்டத்துக்கு ஆதரவாக இருந்த 200 பேருக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்திருக்கும் போலீஸார், எஞ்சி இருக்கும் முக்கிய உறுப்பினர்களான சுப.உதயகுமாரன், புஷ்பராயன், மைபா. ஜேசுராஜன் உள்ளிட்டோரையும் கைது செய்ய தீவிரம் காட்டினர்.
தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்று வட்டார பகுதி மக்கள் அனைவரும் இடிந்தகரையில் குவிந்தனர்.
சாலைகளை போலீஸார் சீல் வைத்ததால் உணவுப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஆனாலும், பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்கள் கடல் மார்க்கமாக போராட்டக் களத்துக்கு வந்தனர்.
சீரடைகிறது நிலைமை...
கூடங்குளத்தில் தற்போது நிலைமை சற்று மாறி இருக்கிறது. 5
ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த போலீஸாரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருக்கிறது. செக்-போஸ்டுகளில் நிறுத்தப்பட்டு இருந்த துணை ராணுவப் படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர்.
போலீஸாரின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, போராடும் மக்களிடமும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது.
இடிந்தகரை ஊருக்குள் போலீஸார் நுழைந்து விடாதபடி முன் எச்சரிக்கையுடன், ஊருக்குள் நுழையும் இடத்தில் ஊர் மக்கள் சாலையில் பள்ளம் தோண்டி போட்டிருந்தனர். அத்துடன் கற்களையும் தடிகளையும் முள்ளையும் போட்டு சாலையை மறித்து வைத்திருந்தனர். அதனை எல்லாம் அவர்களாகவே அப்புறப்படுத்திவிட்டனர்.
காலவரையற்ற உண்ணாவிரதம் நீடிப்பு...
அதேவேளையில், போராட்டக்குழுவினர் மீதான வழக்குகள் அனைத்தையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும்; நிலவியல், நீரியல், கடலியல் தொடர்பாக தமிழக மற்றும் இந்திய நிபுணர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவல்களின்படி தங்களால் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த உண்மைத் தன்மையை அறிய உண்மையான, நேர்மையான
குழுவை நியமிக்க வேண்டும்;
*அணு உலை விபத்து காப்பீடு தொடர்பாக இந்தியா - ரஷியா இடையிலான ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும்; அணுக்கழிவை என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்...
இவ்வாறான கோரிக்கைகளை வலியுறுத்தி உதயகுமாரன், புஷ்பராயன் உள்ளிட்ட 15 பேர் இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதம்
மேற்கொண்டு வருகிறார்கள்.
கண்டுகொள்ளாத அரசு...
காலவரையற்ற உண்ணாவிரத்தை உதயகுமாரன் உள்பட 15 பேர் தொடர்ந்துள்ள நிலையில், அவர்களுக்கு ஆதரவாக பெண்கள், முதியோர் உள்பட ஆயிரக்கணக்கானோர் இடிந்தகரையில் குவிந்துள்ள நிலையிலும், பேச்சுவார்த்தையில் அரசு ஈடுபடுவதற்கான அறிகுறிகள் இதுவரை இல்லை.
ஆனால், உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலையை நெல்லை
மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டாக்டர்கள் குழு பரிசோதனை செய்தது, கூடங்குளம் மக்களுக்கு சற்றே ஆறுதல் தருவதாக இருந்தது.
உண்ணாவிரதம் இருப்போரில் சில பெண்கள் மிகவும் பலவீனமாக இருபப்தால், அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை எடுக்க, மருத்துவக் குழு பரிந்துரைத்தனர். ஆனால், அதனை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
புஷ்பராயனுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்தபடி இருப்பதால் தேவையான மருந்துகளை உட்கொள்ள அறிவுறுத்தினர். உதயகுமாரனின் உடல்நலத்தை பாதுகாக்க உண்ணாவிரத்தத்தை முடித்துக் கொள்ள வலியுறுத்தப்பட்டது. அவர் அதை ஏற்கவில்லை.
ஏ.டி.ஜி.பி. ஆய்வு...
தமிழக காவல்துறை ஏ.டி.ஜி.பி. ஜார்ஜ் இன்று கூடங்குளம் வந்தார். அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களையும் அவர் ஆய்வு செய்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், "அணு மின் நிலையப் பணிக்குச் செல்லும் ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்படும். அதற்காகவே கூடுதலாக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நிலைமை சீரடைந்ததும் போலீஸார் திரும்ப பெறப்படுவார்கள்," என்றார்.
அவரிடம், 'இடிந்தகரையில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு இருக்கும் உதயகுமார் கைது செய்யப்படுவாரா?' என கேட்டதற்கு, எந்த பதிலையும் தெரிவிக்காமல் காரில் ஏறி பறந்தார்.