ஞாயிறு, 1 ஜனவரி, 2012


இந்த இனிய புத்தாண்டில் எனக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து எனக்கும் என்னுடைய குடும்பதினர்களுக்கும் தொலைபேசி வழியாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் கைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பான நண்பர்களுக்கும் மனித உரிமைகள் கழக நிர்வாகிகளுக்கும் நண்பர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த 
 !!!!!!!நன்றி நன்றி நன்றி !!!!!!!
2012 புத்தாண்டு வாழ்த்துக்கள் 


என்றும் நட்புடன் 


சே.பா. சபரிராஜ் M.A.,M.phil.
மேலூர் --- மதுரை.

திங்கள், 12 டிசம்பர், 2011

இந்தியர்கள் என்றாலே??????

இந்தியர்கள் என்றாலே இளிச்சவாயர்கள், ஏமாளிகள், எதைச் சொன்னாலும் நம்புபவர்கள், இவர்களை எளிதில் ஏமாற்றிவிடலாம் என்ற தவறான அபிப்பிராயம் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை அகில உலக அளவில் நிலவி வருவதை மனதார நம்மால் மறுக்க இயலாத சூழ்நிலையே நிலவிவருகிறது. இதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் அரசியல் சட்டங்களும் பிற சட்டங்களும் அரசுக் கட்டிலில் தகுதியற்றவர்கள் வந்து அமர்ந்து கோலோச்சும் அவலமுமே ஆகும். ஐம்பத்தாறு தேசங்களாகவும் அனேக குறுநிலப் பகுதிகளாகவும் சிதறுண்டு பற்பல மன்னர் குலத்தவர்களால் பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்யப்பட்ட நம் நாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய நாட்டவர்களான முகலாயர்களும், பின் ஆங்கிலேயர்களும் அடிமைப்படுத்தி அடக்கி ஒடுக்கி நம் செல்வங்களைக் கொள்ளையிட்டதற்கு முக்கியமான காரணம் நம் நாட்டைத் தொன்று தொட்டு ஆண்ட மன்னர்களிடையேயும் மக்களிடையேயும் ஒற்றுமையில்லா நிலை நிலவியதேயாகும்.

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாமணியான சுதந்திரத்தை, அண்ணல் காந்தி முதலிய அரும்பெரும் தலைவர்கள் தங்கள் அனைத்து உடைமைகளையும் இழந்தும், தங்கள் இன்னுயிரை ஈந்தும் பெற்றுத்தந்த சுதந்திரத்தை இன்று உள்நாட்டுக் கொள்ளையர்கள் மீண்டும் அந்நிய நாட்டவர்க்கே தவனை முறையில் விற்று வயிறு வளர்க்கின்றனர். இந்தக் கொடுமைகளுக்கு மூல காரணம் பொருளாதார மேதையென்று பன்னாட்டு நிறுவனப் பெருமுதலாளிகளால் பாராட்டப் பெறும் மன்மோகன் சிங்க் எனும் தாடி வளர்த்துத் தலைப்பாகையினுள் தன் சொட்டைத் தலையை மூடி மறைத்து, சோடாபுட்டிக் கண்ணாடியினுன் தன் பூனைக் கண்களை மூடி ஒன்றுமறியாத சிறுபிள்ளை போல் விழித்து நல்லவர் வேஷம் போடும் நபரால் அமுல்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வரும் பொருளாதார தாராளமயமாக்கல் எனும் பொய்யான கொள்கையே ஆகும்.

அக்கொள்கையின் பயன்களைத் தம் சுயநலத்தைப் பூர்த்தி செய்து கொள்ள ஏற்றவகையிலேயே நம் நாட்டின் பல மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் செயல்படுகின்றனர். இன்று நாட்டின் செல்வங்களில் பெரும்பாலானவை அரசியல்வாதிகளின் குடும்பத்தவராலும், பெருமுதலாளிகளாலும், பல்வேறு அதிகாரிகளாலும் சூறையாடப் பட்டு மக்கள் தலைகள் மொட்டையடிக்கப் பட்டு அவர்கள் கஞ்சிக்கும், கல்விக்கும், மருத்துவ உதவிகளுக்கும் கையேந்திப் பிச்சை கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

நம் நாட்டின் அரசியல் சட்டங்களும் மக்கள் நலச் சட்டங்களும் மிகவும் பலவீனமாக உள்ள்தால் இத்தகைய சுயநலவாதிகள் பெரும் குற்றங்களைப் புரிந்தாலும் உரிய தண்டனை பெறாமல் எளிதில் தப்பிவிடுகின்றனர். இந்நிலை மாற வேண்டுமெனில் சட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் திருத்தப்பட வேண்டும். மக்களை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பிறரும் ஏமாற்றும் வழிகள் இல்லாத நிலை உருவாக்கப்பட வேண்டும். சாலைகளின் குறுக்கே வாகனப் போக்குவரத்துக்குத் தடை ஏற்படுத்தி நடுவே பெரும் செலவில் அலங்கார மேடையமைத்து மக்களின் நலத்தைப் பேணுவதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர்கள் தாங்கள் என வாய்கிழியப் பேசி, தங்கள் வாக்கு வங்கிகளைப் பெருக்கி ஆட்சியைப் பிடித்து நாட்டைக் கொள்ளையிடும் கண்கட்டு வித்தை நடவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்கள் யாவரும் இத்தகைய ஏமாற்றுக் காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

இயல் இசை நாடகம்


இயல் இசை நாடகம் உட்படப் பல கலைகளிலும் தலைசிறந்து விளங்கிய மாமேதைகள் பலர் தோன்றி வாழ்ந்த, வாழ்கின்ற பாரத நாட்டில் பிறந்து வாழும் நாம் அனைவரும் மிகவும் பாக்கியம் செய்தவர்களாவோம். அத்தகைய மாமேதைகளிடையே யார் அதிகத் திறம் வாய்ந்தவர் என்பதைப் பல சமயங்களில் மற்றவர் அறிய முற்பட்டதுண்டு. ஒரு முறை தேவலோகத்தில் இந்திரன் சபையில் நடனமணிகளான ரம்பை, ஊர்வசி இருவரிடையே இத்தகைய ஒரு போட்டி நடைபெற்றது. போட்டிக்கு யாரும் தீர்ப்புச் சொல்ல முன்வரவில்லை. தீர்ப்புச் சொல்ல வல்லவர் யார் என வினவுகையில் உஜ்ஜயினி மாநகரை ஆண்டுவந்த விக்கிரமாதித்த மகாராஜனே என்று அறிந்து அவனை சகல மரியாதையுடன் இந்திரலோகத்துக்கு அழைத்து வந்து நீதிபதி ஸ்தானத்தில் அமர்த்தினான் தேவேந்திரன்.

இரு மலர்ச்செண்டுகளைத் தயாரித்த விக்கிரமாதித்தன் ரம்பை, ஊர்வசி இருவரிடமும் அம்மலர்ச்செண்டுகள் ஒவ்வொன்றைக் கொடுத்து அதனைக் கையில் பிடித்தவாறே நடனமாடப் பணித்தான். ரம்பை தன் மலர்ச்செண்டை லகுவாகப் பிடித்துக் கொண்டு ஆடினாள். ஊர்வசியோ மலர்ச்செண்டை சற்றே இறுகப் பிடிக்கவும் அதனுள் முன்னரே விக்கிரமாதித்தன் வைத்திருந்த வண்டுகள் அவளது கையைக் கடிக்க, நடனத்தில் தாளம் தப்பியது. நடனத்தில் சிறந்தவள் ரம்பையே என்று தீர்ப்பளித்தான்.

தேவலோக நடனமணிகளுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்று சொல்லுமளவுக்கு நாட்டியத்தில் அபாரமான திறமை கொண்டு விளங்கிய நாட்டியப் பேரொளி பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டியிட்டு ஆடிய காட்சி ஒன்று காதல் மன்னன் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன் திரைப்படத்தில் இடம்பெற்றது.

தமிழிசையிலும் கர்நாடக இசையிலும் உலகப் புகழ் பெற்ற இரு மாமேதைகள் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகியோர் என்பது பிரசித்தி. இவர்களுக்கிடையே என்றேனும் போட்டி அரங்கேறியதா எனத் தெரியவில்லையாயினும். அருணாசலக் கவிராயரின் யாரோ இவர் யாரோ எனும் பாடலை இருவரும் தனித் தனியே பாடியுள்ளனர். அப்பாடல்களைக் கேட்டு மனம் மயங்கி இரண்டில் எது அதிக இனிமையுடையதெனத் தீர்மானிக்க முடியாமல் தவித்தவர் பலருண்டு. அத்தவிப்பை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ஆவேன். அதே தவிப்பை யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க நீங்களும் அடைய வேண்டும் எனும் ஆவலில் இதோ:


இயற்றியவர்: அருணாசலக் கவிராயர்
பாடியவர்: எம்.எஸ். சுப்புலக்ஷ்மி

செவ்வாய், 29 நவம்பர், 2011

மத நல்லிணக்கம்



மத நல்லிணக்கம் என்ற சொல்லைக் கேட்டவுடன் , தங்களுடைய மதத்திற்கு பின்னடைவு ஏற்பட்டு விடுமோ என்று யாரும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை. உண்மையான மத நல்லிணக்கம் மதங்களை- எல்லா மதங்களையும் – வளர்க்குமேயல்லாமல் எந்த ஒரு மதத்தையும் அழிக்காது.
மத நல்லிணக்கம் என்பது என்ன?
மத நல்லிணக்கம் என்பது  மக்களிடையே  நட்பை, அன்பை, அமைதியை உருவாக்கக் கூடியது. மத நல்லிணக்கம் என்பது மனிதத்தைக் காக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று.

மத நல்லிணக்கம் என்பது அலங்கார வார்த்தையாக பயன்படுத்தப் படும் ஒரு சொல் அல்ல. அது ம‌ன‌ப்பூர்வ‌மாக‌ ந‌டை முறையில் செய‌ல் ப‌டுத்த‌ப் ப‌ட‌ வேண்டிய‌ விட‌யம்.
மத நல்லிணக்கம் - இதைச் செய்ய‌ வேண்டிய‌ பொறுப்பு எல்லா ம‌னித‌ர்களுக்கும் உள்ள‌து.
மத நல்லிணக்கம் என்பது இன்றைய உலகின் அவசியத் தேவை. உலகிலே எந்த ஒரு சமுதாயமும், எந்த ஒரு நாடும் தனித்து இயங்க முடியாது என்கிற அளவிற்கு பொருளாதார, சமூக, கலாச்சார இணைப்புகள் அதிகமாகி வருகின்றன.
இந்த நிலையிலே மத நல்லிணக்கம் தவிர்க்க முடியாதது.
எல்லா மதங்களிலும் உள்ள நல்ல கருத்துக்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, அவற்றைப் பாராட்டி, அவற்றை எல்லா மக்களும் பினபற்ற வூக்குவிப்பவன் இந்த உலகத்துக்கு நன்மை செய்பவன் ஆகிறான்.
எனவே உண்மையான  மத நல்லிணக்கம் விரும்புபவன் எந்த மதத்தையும் வெறுக்காமல் எல்லா மதங்களையும் ஆக்க பூர்வமான கண்ணோட்டத்திலே அணுகுவான்.
எல்லா மதங்களிலும் மனித சமுதாயத்துக்கு நன்மை தரும் கருத்துக்கள் உள்ளன.

எல்லா உயிர்களின் மீது அன்பு செலுத்தும் கொள்கையைப் போதித்தவர் புத்தர்.  மக்களின் துன்பங்களைக் கண்டு வருந்தி, மக்களுக்காக பாடுபட்டவர். யாரயுமே வெறுக்கவில்லை. யாரையுமே இகழவோ திட்டவோ இல்லை. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் இயேசு கிறிஸ்து  ” நான் பசியாய் இருந்தேன் , எனக்கு உண்ணக் குடுத்தீர்கள் , நான் தாகமாய் இருந்தேன் எனக்கு குடிக்க குடுத்தீர்கள். மிகவும் சிறியவனாகிய என் சகோதரர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு கொடுத்தது எனக்கு கொடுத்தது” என்றார்.  ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்றார் இயேசு கிறிஸ்து- இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

இஸ்லாத்திலே வட்டி வாங்கக் கூடாது,  மது அருந்தக் கூடாது,  சூதாடக் கூடாது என்ற கொள்கைகளை சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு முஸ்லீமும் தன்னுடைய சொத்தில் குறிப்பிட்ட பகுதியை ஏழைகளுக்கு  தானமாக வழங்க வேண்டும் என இஸலாம் சொல்லுகிறது. இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது?ஏன் கடைப்பிடிக்க கூடாது ?
இந்து மதம் ஒரு மனிதன் எப்படிப்பட்ட மன நிலைக்கு வரவேண்டுமென
அத்வேஷ்டா ( மனதிலே வெறுப்புணர்ச்சி இல்லாதவனாக , பகைமை இல்லாதவனாக)
சர்வ பூதானம் மைத்ரா (எல்லா உயிர்களிடனும் சினேக பாவத்துடன்)
நிர்மமோ, நிரஹங்கார (அகந்தையும் திமிரும் இல்லாதவனாக )
ஸம – துக்க ஸுக (இன்பத்தையும் , துன்பத்தையும் ஒன்றாகக் கருதுபவனாய்)
க்ஷமீ (பொறுமை உடையவனாய்)
ஸந்துஷ்ட : ஸததம் (எப்போதும் மகிழ்ச்சி உடையவனாக )
யோகி (யோக நெறியில் நிற்பவன்)
யதாத்மா (அமைதியான ஆத்மா நிலையில் நிற்பவன்)
த்ருட நிச்சய (திடமான உறுதி உடையவன்)
என்பதை சொல்கிறது.  இவை எல்லாம் நல்ல கொள்கைகளா  இல்லையா? அப்படியானால் ஏன் இவற்றை பாராட்டக் கூடாது? ஏன் கடைப்பிடிக்க கூடாது ?

என் மதத்தை மட்டுமே ஆதரிப்பேன், மற்ற மதங்களை வெறுப்பேன் என்று சொல்பவன் மோதலை உருவாக்குபவனாக,  வன்முறையை தன்னை அறியாமலேயே தூண்டுபவனாக, பயங்கர வாதத்தை வூக்குவிப்பனாக அமைந்து விடுகிறான்.
மத நல்லிணக்கத்தை கட்டாயப் படுத்தி உருவாக்க முடியாது. அது மனித  இதயங்களின் அன்பால் உருவாக்கப் பட வேண்டியது. மத நல்லிணக்கத்தை பல நிலைகளில் அனுசரிக்கலாம்.
பிற மதங்களின் மீதுள்ள ஒருவருக்குள்ள  மன வெறுப்பை நீக்குவதே மத நல்லிணக்கத்தின் முதல் படியும், முக்கிய படியும் ஆகும்.
அடுத்தவர் கடவுளாக வணங்கும் தெய்வங்களை எந்த விதமான ஆதாரமுமும் இல்லாமல் இகழ்ந்து பேய் , பிசாசு என்று திட்டி, சமூகங்களுக்கு இடையில் மோதலை உண்டாக்க இரத்த ஆறு ஓட விடுவது இரக்கமற்ற வெறிச் செயலே. எனவே வெறுப்புக் கருத்துக்களை, பகைமை உணர்வை தூண்டும் கருத்துக்களை கை விட வேண்டும.
அதற்கு அடுத்த படியாக பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது நட்பை வளர்க்கும். நல்லிணக்கத்தை உருவாக்கும். பிற மதத்தவரின் விழாக்களில் கலந்து கொள்வது சமரசத்தை, நட்பைக் காட்டுவது.
இதற்கும் அடுத்த கட்டம் மனப் பூர்வமாக மரியாதை செய்வது. புத்தரின் அன்பையும், இராமரின் தியாகத்தையும், இயேசுவின் தியாகத்தையும், இஸ்லாத்தின் சமத்துவத்தையும் புரிந்து கொண்டவர்கள், மத இன மொழி, வர்க்க, ஜீவ வேறுபாடுகளை மறந்து தியாகத்துக்காக , நல்ல கொள்கைகளுக்காக அவர்களை மனப் பூர்வமாக வணங்குவார்கள். இது சிந்தனை முதிர்ச்சி அடைந்த மனநிலை உள்ளவர்களால் செய்யப் படக் கூடியதே.

காந்தி பிறந்த தினத்தன்று காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பது போல, பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது போல,  சர்ச்சுக்கு சென்று இயேசு கிறிஸ்துவுக்கு மெழுகி வர்த்தி ஏற்றி வைக்கலாம், மசூதிக்கு சென்று தொழுகையில் கலந்து கொள்ளலாம், கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றலாம்.
ஒரு இந்து மசூதிக்கு சென்று தொழுதால், இசலாத்தின் மீது வெறுப்பு வராது, மசூதியை இடிக்க மாட்டான். ஒரு முஸ்லீம் புத்த விஹாரத்துக்கு சென்று வந்தால் நல்லிணக்கம் ஏற்படும் , பின்னொரு நாள்  யாராவது  புத்தர் சிலையை உடைப்பதைப் பார்த்தால் அதைத் தடுப்பான்.
மத நல்லிணக்கம் என்பது அவரவர் மதச் சின்னங்களை அணிந்து கொண்டு போது மேடைகளில் கையைக் கோர்த்துக் கொண்டு போஸ் குடுப்பது அல்ல. ஓட்டுக்காக காஞ்சி குடிப்பது போன்ற போலி  மத நல்லிணக்க செயல்களை நம்பி உண்மையான மத நல்லிணக்கத்தை நாம் மறந்து விடக் கூடாது.

புதன், 26 அக்டோபர், 2011

பதினாறு செல்வங்கள்

பதினாறு செல்வங்கள்

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

இன்பமாய் வாழும் வழி


மனிதர்களில் பலர், அதிலும் குறிப்பாக இந்தியர்களுள் அதிகப்படியானோர் சர்க்கரை வியாதியால் அவதிப்படுவது மிகவும் பிரசித்தமானதொரு செய்தியாகும். உண்மையில் சர்க்கரை வியாதி என்பது என்ன?

நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரைச் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் கொண்டு செல்லப்படுகையில் அவற்றுள் நல்ல சத்துக்கள் மட்டும் செல்லுக்குள் செல்ல அனுமதிக்கப் படுகின்றன. நல்லவையல்லாதவை ரத்தத்திலேயே தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டு சிறுநீர் வழியாக உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. நல்ல சர்க்கரைச் சத்தாவது நாம் உண்ணும் உணவில் செரிமானமாகும் பகுதியிலுள்ள சர்க்கரைச் சத்தாகும். நல்லவையல்லாதவை செரிமானமாகாத உணவில் உள்ளனவாகும். இதற்குக் காரணம் நல்ல சர்க்கரைச் சத்துக்கு மட்டும் தேவையான அளவிலேயே இன்சுலின் சுரக்கிறது. நல்லவையல்லாத சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகாரிக்கையில் அது வியாதியாகக் கருதப்படுவதனாலேயே மாத்திரைகளும் இன்சுலின் ஊசி மருந்தும் மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகின்றன.

நாம் உண்ணும் உணவு முழுவதும் செரிமானம் செய்ய எத்தகைய உணவுப் பழக்க வழக்கங்களும் கட்டுப்பாடும் உதவுமோ அவற்றைக் கண்டறிந்து செயல்படுத்தினால் சர்க்கரை வியாதி வராது. ஏற்கெனவே வந்த சர்க்கரை வியாதியும் குணமாகி விடும். இப்பரம ரகசியத்தை நான் அறிந்து கடைபிடித்துப் பலனடைந்த விவரத்தை யாவரும் அறிய விரும்பி எடுத்துரைக்க விழைகிறேன்.

சுமார் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வரை நான் வாழ்வில் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்காமல் நினைத்த நேரத்தில் உணவுண்பதும், கணக்கின்றி காஃபி அருந்துவதும், பகல் இரவு பாராமல் அளவின்றி கணிணியின் முன்னர் அமர்ந்து பணி செய்வதும், அதிகமாகப் புகைபிடிப்பதும், போதிய நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யாமலும் ஒரு முறையற்ற வாழ்க்கை வாழ்ந்து வந்தேன். அதன் பின்னர் சிக்கன் குனியா நோய் பரவிய சமயம் நானும் அதனால் பாதிக்கப்பட்டு அவதியுற்றேன். பின்னர் ந்டப்பதற்கு மிகவும் சிரமப்பட்டேன். அதன் பின் எனக்கு ஒரு முறை சற்றே மூச்சுத் திணரல் ஏற்பட்டது. இரவில் உறங்க எண்ணிப் படுக்கையில் மூச்சுத் திணரல் அதிகமானதும் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து கொண்டிருப்பது, மொட்டை மாடிக்குச் சென்று உலாவுவது என்று ஒரு அமைதியற்ற நிலையில் தவித்தேன். மருத்துவரை அணுகினேன். அவர் எனக்கு ரத்தப் பரிசோதனை நடத்தச் சொல்லி அதன் படி ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அபரிமிதமாக உள்ளதெனக் கண்டறிந்து தொடர்ந்து மாத்திரைகள் உட்கொள்ளுமாறும், புகைபிடிப்பதைக் குறைத்துக் கொண்டு விரைவில் நிறுத்தி விடுமாறும் அறிவுறுத்தினார். 

இதன் பின்னர் உணவில் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து, புகை பிடிப்பதை மிகவும் குறைத்துக் கொண்டு, தினமும் தவறாமல் நடைப்பயிற்சியும் உடற்பயிற்சியும் மேற்கொண்டு வந்தேன். இருப்பினும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாகவே இருந்து வந்ததால் தொடர்ந்து மாத்திரைகள் உட்கொண்டு வந்தேன். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பிருந்து தமிழகத்தில் தமிழக அரசின் முயற்சியால் பல்வேறு ஆலயங்களிலும் யோகாசனப் பயிற்சி தரப்பட்டு வருகிறது. அதன்படி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியால் அமையப் பெற்ற மனவளக் கலை மன்றத்தைச் சேர்ந்த யோகாசனப் பயிற்சியாளர்களைக் கொண்டு யோகப் பயிற்சி அளிக்கப் பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சேர்ந்து தொடர்ந்து பயிற்சி செய்து வருகிறேன். இப்பயிற்சியினாலும் தினமும் நடைப்பயிற்சி செய்வதாலும் நடப்பதில் இருந்த சிரமம் குறைந்துள்ளது அத்துடன் கண்பார்வையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமும் காணப்படுகிறது. இரவில் அதிக நேரம் விழித்திருப்பதைத் தவிர்த்து உறக்கம் வந்தவுடன் உறங்கச் சென்று இரவில் நன்கு தூங்கி வருவதால் உடலும் மனதும் முன்பிருந்ததை விடவும் அமைதியாக உள்ளன.

இந்நிலையில் சர்க்கரை வியாதி ஒரு வியாதியே அல்லவென்றும் அதனை மருந்துகள் உட்கொள்ளாமலேயே குணப்படுத்த இயலுமென்றும் தெளிவாக விளக்கும் வீடியோவை யூட்யூப் தளத்தில் கண்டேன்:
அதில் அளிக்கப்பட்ட விளக்கத்தைக் கேட்டதால் எனக்குள் ஒரு தெளிவு பிறந்தது. அதன் படி அன்றுமுதல் நான் சர்க்கரை வியாதிக்கான மாத்திரைகள் உட்கொள்வதை நிறுத்தி உணவில் மேலும் அதிக கவனம் செலுத்தினேன். இவ்வாறு மாத்திரைகள் உட்கொள்ளாமல் சுமார் 10 நாட்களுக்குப் பின்னர் ரத்ததிலும் சிறுநீரிலும் உள்ள சர்க்கரை அளவைக் காண வழக்கமான பரிசோதனையை மேற்கொண்டேன். அதிலிருந்து சர்க்கரையின் அளவு அதிக அளவில் இல்லாமல் மருத்துவர்களால் வகுக்கப்பட்ட அளவில் இருப்பது தெளிவாகத் தெரிந்தது 

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் எனும் பொன்மொழிக்கிணங்க என் நண்பர்கள் யாவரும் மற்றும் பிற யாவரும் இப்பயிற்சிகளை மேற்கொண்டு பயனடைய வேண்டுமென விரும்புகிறேன்.

வேதாத்திரி மகரிஷி அவர்களே யோகப்பயிற்சிகளைப் பின்வரும் வீடியோக்காட்சிகளில் கற்றுத்தருகிறார்.








--