வியாழன், 28 ஏப்ரல், 2011

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு-1
வரவேற்புக்கு மறு மொழி.  செப்டம்பர், 11 ,  1893

அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே !!!

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழி கூற இப்போது உங்கள் முன் நிற்கின்றேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகின்றது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியரின் பரம்பரை பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகின்றேன். அனைத்து மதங்களின் அன்னையின் பெயரால் நன்றி கூறுகின்றேன். பல்வேறு இனங்களையும், பிரிவுகளையும் சார்ந்த இந்து பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகின்றேன்.  இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றி குறிப்பிடும்போது வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பலநாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை இவர்களைத்தான் சாரும் என்று கூறினார்கள், அவர்களுக்கும் எனது நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், ஆகியவற்றை எதிப்பு இன்றி ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்கு புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் மிகவும் பெருமை அடைகின்றேன். எதையும் வெறுக்காமல் மதிக்கவேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக்கொள்ளவும் செய்கின்றோம்.

உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைபடுத்தப் பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகின்றேன். ரோம்மணிரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து, சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்த கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனதாரத் தழுவிக் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகின்றேன். மேலும் பெருமை மிக்க சொராஸ்திரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கின்றேன்.
அன் அருமை சகோதர்களே!!!  பிள்ளை பருவத்திலிருந்து நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள்தோறும், இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு உங்கள் முன் குறிப்பிட விரும்புகின்றேன்.


"எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
இறுதியிலே கடலில் சென்று
சங்கமாம் தன்மையினைப் போன்றுலகோர்
பின்பற்று தன்மை யாலே
சங்கமிகு நெறி பலவாய் நேராம்
வளைவாம் தோன்றினாலும்
அங்கு அவைதாம் எம்பெரும!! ஈற்றில் உனை
அடைகின்ற ஆறேயன்றோ!!!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில் மிக, மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்த பேரவை, கீதையில் உபதேசிக்கப்பட்டுள்ள பின்வரும் அறுபுதமான உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன்.  யார் எந்த வழியாக என்னிடம் வரமுயன்றாலும் நான் அவர்களை அடைகின்றேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கின்றார்கள். அவையெல்லாம், இறுதியில் என்னையே அடைகின்றன.

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த பூமியினை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும், மீண்டும் மூழ்கடித்து நாகரீகத்தை அழித்து எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்து விட்டன. அந்த கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதைவிட பன்மடங்கு உயர்நிலை எய்தியிருக்கும். அவற்றிற்கான அழிவு காலம் வந்துவிட்டது. இந்த பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணியோசை மதவேரிகளுக்கும், வாளாலும், பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் அடிக்கும் சாவு மணி ஒசையாகும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

அடுத்ததாக "நாம் ஏன் ஒத்துப் போவதில்லை" என்ற தலைப்பில் செப்டம்பர் 15 திகதி 1983 -ல் ஆற்றிய உரை தொடரும் ...அன்புடன் கே எம் தர்மா...(28 APRIL 2011)
நன்றி ..ஆங்கில மற்றும் தமிழ் பதிவுகளை பெற உதவிய வலைதலங்களுக்கும், வழிகாட்டிய நண்பர்களுக்கும்.

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம் 
வாக்குரிமையை பயன்படுத்துவோம் 

வியாழன், 7 ஏப்ரல், 2011

அன்னை தெரேசா

ஏழைகளை, அனாதைகளை இரட்சிப்பதற்காக ஆண்டவன் எடுத்த அவதாரம் அன்னை தெரேசா!. எளிமையும், இனிமையும் கருணையும் கலந்த இறைவனின் உருவமாய் உலகிலே பிறந்த அன்னையின் சேவையின் பாதையில் இன்னமும் தேவைகள் உள்ளன. அவர் நடந்துசென்ற பாதையில் இன்னமும் பல பிஞ்சு அரும்புகள் வறுமையில் கருதி வீழ்கின்றன. அவர் துடைத்துவிட்டுச் சென்ற ஏழைகள் விழிகளில் மறுபடி இரத்தம் சொட்டவே செய்கிறது. இறைவனின் சாபம் இந்த உலகின் வறுமை. இதை துடைத்திட நினைத்து முழு மனத்துடன் நாமும் முயற்சிக்கலாமே.

உங்களுக்கு தெரியுமா அன்பு நண்பர்களே!... நீங்கள் ஒருநாளில் வீண்விரயமாக செலவிடும் பணத்தொகையில் ஒரு ஏழையின் வயிறு தாராளமாக மூன்றுவேளையும் பசியாறமுடியும்.
நீங்கள் ஒருநாளில் செலவிடும் சராசரி தொகையில் நிச்சயமாக சில ரூபாய்களாவது அனாவசியமாக அல்லது எவருக்குமே பிரயோசனம் அற்றவகையில் வீணாகிப்போகின்றன…  இன்டர்நெட் பார்க்கும்போது, அலைபேசியில் பேசும்போது,  நொறுக்குத் தீனி சாப்பிடும்போது, ஆடம்பரத்துக்காய் செலவிடும்போது.. இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் சில சில ரூபாய்கள் கரைந்து போகின்றன.. யாருக்குமே பயன்படாமல்…

பேருந்தில் செல்லும்போது, கடைகளில் பொருட்களை வாங்கும்போது, சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்கும்போது.. என பல சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்களுக்கு கிடைக்கவேண்டிய மிகுதிக் காசுகளைக்கூட கேட்டுவாங்க மறுத்தோ அல்லது புறக்கணித்து விட்டுவிட்டோ போகின்றீர்கள். அவ்வாறு கவனிக்கப்படாமல் விட்டுவிடப்படுகின்ற நாணயக் குற்றிகளை ஒட்டுமொத்தமாக சேர்த்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு எத்தனையோ ஏழைகளின் வீடுகளில் சமையல் அடுப்பை எரியவைக்கமுடியும்.

ஆலயங்களுக்கும், ஆன்மீக மடாலயங்களுக்கும், அரசியல் கட்சி நிதிக்கும், விளையாட்டுப் போட்டிகளுக்கும் என்று தினம் தினம் எத்தனை இலட்சங்கள் அன்பளிப்பு செய்யப்படுகின்றன. சினிமா சூட்டிங்கிற்கும், கலைநிகழ்ச்சி மீட்டிங்களுக்கும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கும் என கொட்டப்படும் நிதிக்குத்தான் குறைவுண்டா?. தனவந்தர்களே.. தருமப் பிரபுக்களே நீங்கள் வாரிவழங்கும் செல்வத்தில் ஒரு சிறு துளிகளையாவது ஏழைகள் பக்கமாய் திருப்பிவிட மாட்டீர்களா?

கொடுமை கொடுமை வறுமை கொடுமை.. அதனிலும் கொடுமை இளமையில் வறுமை…. அதனிலும் கொடுமை இளமையில் வறுமையும், தனிமையும். யாரும் அற்ற அனாதைகளாய் வறுமையும், தனிமையும் வாட்டிட வதங்கிக் கிடக்கும் குழந்தைச் செல்வங்களுக்காய் உதவிட வாரீர். உங்கள் ஒவ்வொரு பணத்துளிகளும் அந்த பிஞ்சு உள்ளங்களின் கண்ணீர்த்துளிகளை துடைத்திடவல்லது.

இந்த ஆசிரமத்துக்குத்தான் உதவுங்கள், இந்த ஆனாதை இல்லத்துக்குத்தான் உதவுங்கள் என்று கேட்கவில்லை நண்பர்களே… நீங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எந்த அனாதைக் குழந்தைக்காவது உதவிடுங்கள். ஆண்டவன் உங்கள் பிள்ளைகளிடம் கருணை மிகுந்தவராக இருப்பார், உங்கள் நலன்களிலே கனிவு கொண்டவராய் இருப்பார்.

ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம்.

செவ்வாய், 5 ஏப்ரல், 2011


"அரிதரிது மானிடராதலறிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறப்பினும்
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்திருந்தக்கால்
வானவர் நாடு வழி திறந்திடுமே"

என்று மானிடப் பிறவியின் மகத்துவத்தை தமிழ் மூதாட்டி ஔவை விளக்குகிறார்.

"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம்
நீதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்"

என்று மானிடப் பிறவியின் உயர்வை தமிழ் மக்கள் மனதில் என்றும் அழியா இடம்பிடித்த அமரகவி கண்ணதாசன் குறிப்பிடுகிறார். 

பெறுதற்கரிய அத்தகைய மானிடப் பிறவியை அடைந்த நாம் வாழ்வில் வெறுமனே பிறந்தோம், உண்டோம், உடுத்தோம், உறங்கினோம், சிற்றின்பங்களை அனுபவித்தோம், பொருளீட்டினோம், அவ்வாறு ஈட்டிய பொருளை அனுபவிக்குமுன்னரே இறந்தோம் எனும் வகையில் வாழ்ந்ததும் தெரியாமல் மடிந்ததும் தெரியாமல் மறைந்து போகாமல் நம் பூதவுடல் மறைந்த பின்னரும் நம் பெயரும் நாம் செய்த தானமும் தவமும் உலகில் என்றென்றும் நினைவில் கொள்ளப்பட்டு அழியாப் புகழை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நாம் நாள்தோறும் முன்று வேளைகள் வயிறாற உண்டு சுகிக்கையில் நம் நண்பர்களும் அண்டை வீட்டாரும் நம் ஊரிலும் நாட்டிலும் உலகில் பிற இடங்களிலும் உள்ளவர் உணவின்றி வருந்தி மடியும் நிலை இருந்தும் அதனை அகற்ற முயலாமல் வாழ்நாளை வீணாளாக்குவது மடமை. 

என்னிடம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே வசதி இருக்கிறது. பிறருக்கு உதவப் பொருள் ஏதும் இல்லை என்று நாம் சொல்வோமெனில் அது மடமையிலும் மடமையே. நாம் அரை வயிறளவே உண்ண முடியும் படியான வறுமையில் வாடினாலும் நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதியை வாடும் ஏழை ஒருவருக்குப் பகிர்ந்தளித்து உண்பதே மனிதராய்ப் பிறந்த நமக்கு சிறப்பு.

இதனாலேயே வள்ளுவர்

பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் ஆன்றோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்று அறிவுறுத்துகிறார்.

நாம் கடையெழு வள்ளல்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். கலியுக வள்ளல்களான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரைப் பற்றியும் அறிவோம்.

என்.எஸ். கிருஷ்ணன் அதிக அளவு பொருள் சேர்க்கவில்லை. பெரும்பாலும் ஏழ்மையிலேயே வாழ்ந்த போதிலும் தன்னிடம் உதவி கேட்டு வருவோர்க்குத் தன்னிடம் இருப்பதை மனமுவந்து அளித்து வந்ததோடு தன்னிடம் உதவி செய்யப் போதிய பொருள் இல்லாவிடில் தனக்குத் தெரிந்த பிறரிடம் கேட்டுப் பெற்றாகிலும் தன்னை நாடி வந்தோர்க்கு உதவினார். பொருளாதாரத்தில் அவர் நலிவுற்றதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டை ஆண்டுவந்த ஆங்கிலேய அரசாங்கம் அவரையும் அவரது நெருங்கிய நண்பரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களையும் இந்து நேசன் எனும் பத்திரிகை நிருபர் லக்ஷ்மிகாந்தன் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது தான். அதன் பிறகு அவரும் பாகவதரும் குற்றம் நிரூபிக்கப்படாமல் நிரபரரதிகள் எனத் தீர்ப்பாகி விடுதலை பெற்றாலும் அவர்களுக்கிருந்த மார்க்கெட் குறைந்ததால் பொருளாதார நிலையில் அவர்கள் உயரவில்லை.

எம்ஜிஆர் அவர்கள் தொடக்கம் முதல் தன் வாழ்நாள் முழுவதும் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எனும் உயரிய நிலையில் வாழ்ந்திருந்தமையால் அவர் நிறையப் பொருளீட்டினார். அதே போல் நிறையப் பேருக்குத் தொடர்ந்து தான தருமங்களும் செய்து வந்தார். அவர் தொடங்கி வைத்த தான தருமங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.

1966ஆம் ஆண்டு வெளிவந்த "பெற்றால் தான் பிள்ளையா?" திரைப்படம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் வில்லனாக நடித்த நடிகவேள் எம்.ஆர். ராதா கோபத்தில் எம்ஜிஆர் அவர்களைத் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் அவர் தொண்டையில் குண்டுபாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தெய்வாதீனமாகப் பிழைத்து வந்து நீண்ட காலம் சிறப்பாக வாழ்ந்தார். 

அவரை சுட்ட குற்றத்துக்காக கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகவேள் தண்டனை முடிந்து வெளியே வந்ததும் கோப தாபங்களை விடுத்து அமைதியான வாழ்வை மேற்கொண்டார். சிறைக்குச் செல்லும் முன்னர் ஈ.வெ.ரா. பெரியார் வழியில் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைபிடித்து வந்த நடிகவேள் சிறை தண்டனை முடிந்து வெளிவந்த பின்னர் சிறந்த தெய்வ பக்தராக மாறினார். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுடன் இணைந்து "திருவருள்" எனும் திரைப்படத்திலும் நடித்தார்.

எம்ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை மனித வாழ்வில் "தருமம் தலை காக்கும்" எனும் உயரிய தத்துவத்தை உலகுக்கெல்லாம் உணர்த்துகின்றது.


திரைப்படம்: தர்மம் தலை காக்கும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1963

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் - செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும்
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும் - நம்மை 
வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் - நம்மை 
வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் - செய்த

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு - வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு - வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு - என்றும்

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

நன்றி ஏகே ஆர்

இது எப்படி இருக்கு

இது எப்படி இருக்கு 

திங்கள், 4 ஏப்ரல், 2011

அணுசக்தி மறுப்பு நாள்


    ஏப்பிரல் 11 அன்று இந்தியா அணுசக்தி மறுப்பு நாளைக் கொண்டாடவிருக்கிறது. அணுசக்தி வேண்டுமா வேண்டாமா என்பதில் ஒரு முடிவு எடுக்காதவர்களும் கூட ஜப்பானிய விபத்துக்குப் பின்னர் தாம் இருக்கும் ஊருக்கு அருகில் உள்ள அணு உலைகள் வெடித்தால் எழும் கதிரியக்கத்தை எப்படி எதிர்கொள்வது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய நாள். அணுமின் நிலையங்களை இயக்குபவர்கள் அவற்றை முறையாக நடத்துகிறார்களா என்று கண்காணிப்பது பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நாள். 30 அல்லது 40 ஆண்டு ஆயுள் உள்ள அணுமின் நிலையங்களைக் கட்டித்தான் நமது மின்சாரத் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமா என்று சிந்திடுப் பார்க்க வேண்டிய நாள். இருக்கும் அணு மின் நிலையங்களையே என்றென்றும் கட்டிக் காக்கத் திராணியற்ற நாம் மேன்மேலும் அணுமின் நிலையங்களைக் கூட்டிக் கொண்டு போவதுதான் அறிவுள்ள செயலா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய நாள்.