செவ்வாய், 5 ஏப்ரல், 2011


"அரிதரிது மானிடராதலறிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறப்பினும்
ஞானமும் கல்வியும் நயத்தலரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தலரிது
தானமும் தவமும் தான் செய்திருந்தக்கால்
வானவர் நாடு வழி திறந்திடுமே"

என்று மானிடப் பிறவியின் மகத்துவத்தை தமிழ் மூதாட்டி ஔவை விளக்குகிறார்.

"மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகியாகலாம்
நீதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்"

என்று மானிடப் பிறவியின் உயர்வை தமிழ் மக்கள் மனதில் என்றும் அழியா இடம்பிடித்த அமரகவி கண்ணதாசன் குறிப்பிடுகிறார். 

பெறுதற்கரிய அத்தகைய மானிடப் பிறவியை அடைந்த நாம் வாழ்வில் வெறுமனே பிறந்தோம், உண்டோம், உடுத்தோம், உறங்கினோம், சிற்றின்பங்களை அனுபவித்தோம், பொருளீட்டினோம், அவ்வாறு ஈட்டிய பொருளை அனுபவிக்குமுன்னரே இறந்தோம் எனும் வகையில் வாழ்ந்ததும் தெரியாமல் மடிந்ததும் தெரியாமல் மறைந்து போகாமல் நம் பூதவுடல் மறைந்த பின்னரும் நம் பெயரும் நாம் செய்த தானமும் தவமும் உலகில் என்றென்றும் நினைவில் கொள்ளப்பட்டு அழியாப் புகழை அடைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

நாம் நாள்தோறும் முன்று வேளைகள் வயிறாற உண்டு சுகிக்கையில் நம் நண்பர்களும் அண்டை வீட்டாரும் நம் ஊரிலும் நாட்டிலும் உலகில் பிற இடங்களிலும் உள்ளவர் உணவின்றி வருந்தி மடியும் நிலை இருந்தும் அதனை அகற்ற முயலாமல் வாழ்நாளை வீணாளாக்குவது மடமை. 

என்னிடம் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே வசதி இருக்கிறது. பிறருக்கு உதவப் பொருள் ஏதும் இல்லை என்று நாம் சொல்வோமெனில் அது மடமையிலும் மடமையே. நாம் அரை வயிறளவே உண்ண முடியும் படியான வறுமையில் வாடினாலும் நாம் உண்ணும் உணவில் ஒரு பகுதியை வாடும் ஏழை ஒருவருக்குப் பகிர்ந்தளித்து உண்பதே மனிதராய்ப் பிறந்த நமக்கு சிறப்பு.

இதனாலேயே வள்ளுவர்

பகுத்துண்டு பல்லுயிரோம்புதல் ஆன்றோர் 
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

என்று அறிவுறுத்துகிறார்.

நாம் கடையெழு வள்ளல்களைப் பற்றிப் படித்திருக்கிறோம். கலியுக வள்ளல்களான கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆகியோரைப் பற்றியும் அறிவோம்.

என்.எஸ். கிருஷ்ணன் அதிக அளவு பொருள் சேர்க்கவில்லை. பெரும்பாலும் ஏழ்மையிலேயே வாழ்ந்த போதிலும் தன்னிடம் உதவி கேட்டு வருவோர்க்குத் தன்னிடம் இருப்பதை மனமுவந்து அளித்து வந்ததோடு தன்னிடம் உதவி செய்யப் போதிய பொருள் இல்லாவிடில் தனக்குத் தெரிந்த பிறரிடம் கேட்டுப் பெற்றாகிலும் தன்னை நாடி வந்தோர்க்கு உதவினார். பொருளாதாரத்தில் அவர் நலிவுற்றதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டை ஆண்டுவந்த ஆங்கிலேய அரசாங்கம் அவரையும் அவரது நெருங்கிய நண்பரான எம்.கே. தியாகராஜ பாகவதர் அவர்களையும் இந்து நேசன் எனும் பத்திரிகை நிருபர் லக்ஷ்மிகாந்தன் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது தான். அதன் பிறகு அவரும் பாகவதரும் குற்றம் நிரூபிக்கப்படாமல் நிரபரரதிகள் எனத் தீர்ப்பாகி விடுதலை பெற்றாலும் அவர்களுக்கிருந்த மார்க்கெட் குறைந்ததால் பொருளாதார நிலையில் அவர்கள் உயரவில்லை.

எம்ஜிஆர் அவர்கள் தொடக்கம் முதல் தன் வாழ்நாள் முழுவதும் எங்கும் வெற்றி எதிலும் வெற்றி எனும் உயரிய நிலையில் வாழ்ந்திருந்தமையால் அவர் நிறையப் பொருளீட்டினார். அதே போல் நிறையப் பேருக்குத் தொடர்ந்து தான தருமங்களும் செய்து வந்தார். அவர் தொடங்கி வைத்த தான தருமங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன.

1966ஆம் ஆண்டு வெளிவந்த "பெற்றால் தான் பிள்ளையா?" திரைப்படம் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் வில்லனாக நடித்த நடிகவேள் எம்.ஆர். ராதா கோபத்தில் எம்ஜிஆர் அவர்களைத் தனது கைத்துப்பாக்கியால் சுட்டதில் அவர் தொண்டையில் குண்டுபாய்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு தெய்வாதீனமாகப் பிழைத்து வந்து நீண்ட காலம் சிறப்பாக வாழ்ந்தார். 

அவரை சுட்ட குற்றத்துக்காக கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை பெற்ற நடிகவேள் தண்டனை முடிந்து வெளியே வந்ததும் கோப தாபங்களை விடுத்து அமைதியான வாழ்வை மேற்கொண்டார். சிறைக்குச் செல்லும் முன்னர் ஈ.வெ.ரா. பெரியார் வழியில் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கடைபிடித்து வந்த நடிகவேள் சிறை தண்டனை முடிந்து வெளிவந்த பின்னர் சிறந்த தெய்வ பக்தராக மாறினார். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களுடன் இணைந்து "திருவருள்" எனும் திரைப்படத்திலும் நடித்தார்.

எம்ஜி.ஆர். அவர்களின் வாழ்க்கை மனித வாழ்வில் "தருமம் தலை காக்கும்" எனும் உயரிய தத்துவத்தை உலகுக்கெல்லாம் உணர்த்துகின்றது.


திரைப்படம்: தர்மம் தலை காக்கும்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
ஆண்டு: 1963

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் - செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும்
மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கிவிடும் - நம்மை 
வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் - நம்மை 
வாழவிடாதவர் வந்து நம் வாசலில் வணங்கிட வைத்துவிடும் - செய்த

தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு - வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு - வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்கு மறை தீர்ப்பு - என்றும்

தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிற்கும் செய்த
தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்

நன்றி ஏகே ஆர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக