ஏழைகளை, அனாதைகளை இரட்சிப்பதற்காக ஆண்டவன் எடுத்த அவதாரம் அன்னை தெரேசா!. எளிமையும், இனிமையும் கருணையும் கலந்த இறைவனின் உருவமாய் உலகிலே பிறந்த அன்னையின் சேவையின் பாதையில் இன்னமும் தேவைகள் உள்ளன. அவர் நடந்துசென்ற பாதையில் இன்னமும் பல பிஞ்சு அரும்புகள் வறுமையில் கருதி வீழ்கின்றன. அவர் துடைத்துவிட்டுச் சென்ற ஏழைகள் விழிகளில் மறுபடி இரத்தம் சொட்டவே செய்கிறது. இறைவனின் சாபம் இந்த உலகின் வறுமை. இதை துடைத்திட நினைத்து முழு மனத்துடன் நாமும் முயற்சிக்கலாமே.
உங்களுக்கு தெரியுமா அன்பு நண்பர்களே!... நீங்கள் ஒருநாளில் வீண்விரயமாக செலவிடும் பணத்தொகையில் ஒரு ஏழையின் வயிறு தாராளமாக மூன்றுவேளையும் பசியாறமுடியும்.
நீங்கள் ஒருநாளில் செலவிடும் சராசரி தொகையில் நிச்சயமாக சில ரூபாய்களாவது அனாவசியமாக அல்லது எவருக்குமே பிரயோசனம் அற்றவகையில் வீணாகிப்போகின்றன… இன்டர்நெட் பார்க்கும்போது, அலைபேசியில் பேசும்போது, நொறுக்குத் தீனி சாப்பிடும்போது, ஆடம்பரத்துக்காய் செலவிடும்போது.. இப்படி ஒவ்வொரு சின்னச் சின்ன விடயங்களிலும் சில சில ரூபாய்கள் கரைந்து போகின்றன.. யாருக்குமே பயன்படாமல்…
பேருந்தில் செல்லும்போது, கடைகளில் பொருட்களை வாங்கும்போது, சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்கும்போது.. என பல சந்தர்ப்பங்களில் நீங்கள் உங்களுக்கு கிடைக்கவேண்டிய மிகுதிக் காசுகளைக்கூட கேட்டுவாங்க மறுத்தோ அல்லது புறக்கணித்து விட்டுவிட்டோ போகின்றீர்கள். அவ்வாறு கவனிக்கப்படாமல் விட்டுவிடப்படுகின்ற நாணயக் குற்றிகளை ஒட்டுமொத்தமாக சேர்த்துப் பார்த்தால் ஒரு நாளைக்கு எத்தனையோ ஏழைகளின் வீடுகளில் சமையல் அடுப்பை எரியவைக்கமுடியும்.
ஆலயங்களுக்கும், ஆன்மீக மடாலயங்களுக்கும், அரசியல் கட்சி நிதிக்கும், விளையாட்டுப் போட்டிகளுக்கும் என்று தினம் தினம் எத்தனை இலட்சங்கள் அன்பளிப்பு செய்யப்படுகின்றன. சினிமா சூட்டிங்கிற்கும், கலைநிகழ்ச்சி மீட்டிங்களுக்கும், கேளிக்கை கொண்டாட்டங்களுக்கும் என கொட்டப்படும் நிதிக்குத்தான் குறைவுண்டா?. தனவந்தர்களே.. தருமப் பிரபுக்களே நீங்கள் வாரிவழங்கும் செல்வத்தில் ஒரு சிறு துளிகளையாவது ஏழைகள் பக்கமாய் திருப்பிவிட மாட்டீர்களா?
கொடுமை கொடுமை வறுமை கொடுமை.. அதனிலும் கொடுமை இளமையில் வறுமை…. அதனிலும் கொடுமை இளமையில் வறுமையும், தனிமையும். யாரும் அற்ற அனாதைகளாய் வறுமையும், தனிமையும் வாட்டிட வதங்கிக் கிடக்கும் குழந்தைச் செல்வங்களுக்காய் உதவிட வாரீர். உங்கள் ஒவ்வொரு பணத்துளிகளும் அந்த பிஞ்சு உள்ளங்களின் கண்ணீர்த்துளிகளை துடைத்திடவல்லது.
இந்த ஆசிரமத்துக்குத்தான் உதவுங்கள், இந்த ஆனாதை இல்லத்துக்குத்தான் உதவுங்கள் என்று கேட்கவில்லை நண்பர்களே… நீங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் எந்த அனாதைக் குழந்தைக்காவது உதவிடுங்கள். ஆண்டவன் உங்கள் பிள்ளைகளிடம் கருணை மிகுந்தவராக இருப்பார், உங்கள் நலன்களிலே கனிவு கொண்டவராய் இருப்பார்.
ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக